முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து நீக்குவதற்கான பணியில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான புகாரையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் சர்ச்சைக்குரியவை, ஆபாசம், தீவிரவாதம், குற்றம் தொடர்பான கருத்துகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்தது.இந்த பணியில் தமிழ், கன்னடம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட மொழிகள் பேசும் இளைஞர்கள் தேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ஐதராபாத்தில் உள்ள ஜென்பேக்ட் என்ற கருத்துகள் மேலாண்மை சேவை நிறுவனம் நேர்முகத் தேர்வை நடத்துவதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, மென்பொருளில் ஏற்பட்ட \’பக்\’ என்னும் தொழில்நுட்ப குறைபாட்டின் காரணமாக 14 மில்லியன் முகநூல் பயனர்கள் தங்களது தனியுரிமை சார்ந்த தகவல்களை தெரியாமலேயே பொதுவெளியில் பகிர்ந்திருப்பார்கள் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. முகநூல் பயனர் ஒருவர் தனது கணக்கில் பதிவிடப்படும் பதிவுகளை தனிப்பட்ட பதிவாக வெளியிடுவதற்கு முன்னரே தேர்ந்தெடுத்திருந்தாலும், அது தற்போது பொதுவெளியில் பகிரப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

error: Content is protected !!