கத்தார் தனித் தீவாகிறது! –

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி தனிமைப்படுத்தப்பட்ட கத்தார் எல்லையில் ஒரு கால்வாயை வெட்டி கத்தாரை ஒரு தீவாக மாற்ற சவுதி அரேபியா திட்டமிட்டு   உள்ளது. இந்த தகவலை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சவுத் அல் கஹ்த்தானி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் மூன்று பக்கம் கடல் சூழ்ந்த தீபகற்ப நாடு. கத்தாரின் நிலப்பரப்பு எல்லை சவுதி அரேபியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே சவுதி அரேபியாவின் உதவியுடன் தான் கத்தாருக்கான சாலை வழி போக்குவரத்துகள் நடைபெற முடியும்.ஆனால் கடந்த ஆண்டு கத்தாருடனான தூதரக உறவை சவுதி அரேபியா உட்பட சில அரபு நாடுகள் துண்டித்தன. கத்தார் பயங்கரவாத ஆதரவு செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் காரணமாக கத்தாருடனான சாலை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் கத்தாரில் பொருட்கள் தட்டுப்பாடு நிலவியது. ஆனால் குவைத், ஈரான் போன்ற சில நாடுகளின் உதவியுடன் கத்தார் நிலைமையை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கத்தாருடனான பிரச்சனையின் அடுத்த கட்டமாக அந்நாட்டுடனான எல்லைப் பரப்பை முற்றிலும் துண்டிக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அரசு சார்ந்த இணையத்தளத்தில் தகவல்கள் வெளியானது. கத்தார் எல்லையை ஒட்டி 60 கிலோமீட்டர் நீளம், 200 மீட்டர் அகலத்துக்கு கால்வாய் ஒன்றை சவுதி அரேபியா வெட்டப்போவதாகவும் அதற்கு சால்வா தீவு திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது என அந்த தகவல்கள் தெரிவித்தன.

சுமார் 7.50 கோடி டாலர்கள் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த கால்வாயின் ஒரு பகுதியை அணுக்கழிவுகளை சேமிக்கும் இடமாக மாற்றவும் சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆக கத்தாரை முழுமையாக துண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சவுதி அரேபியா இந்த கால்வாய் திட்டத்தில் இறங்கியுள்ளது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

error: Content is protected !!