மதுரை வீரன் – திரை விமர்சனம்! –
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க நம் மெரீனா உள்ளிட்ட உலகமெங்கும் நடந்த போராட்டத்திற்கு பின்னர்தான் இந்த வீர விளையாட்டின் பின்னணியை, அருமையை , பெருமையை நம்மவர்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே புரிந்து கொண்டார்கள். அதையடுத்து அண்மையில் பொங்கல் சீசனின் போதும் கிராண்டாக நடந்த முடிந்து விட்டது இந்த ஜல்லிக்கட்டு கோலாகலம். இந்நிலையில் அந்நிகழ்வின் பின்னணியில், நடப்பில் பல்வேறு கிராமங்களில் ஜாதி, பகை, பொறாமை நிலவியதை அப்ப(ட்)டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது ‘மதுரைவீரன்’
அதாகப்பட்டது.. மதுரை ஏரியாவில் பிறந்து வளர்ந்த சண்முகப் பாண்டியன் மலேசியா போய் இஞ்சினியர் பணிபுரியும் நிலையில் தனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லி தனது அம்மாவுடன் சொந்த கிராமத்திற்கு வருகிறார். வந்த இடத்தில் தான் பெண் பார்க்க வரவில்லை என்றும் தன் அப்பாவை கொன்றவன் பற்ரியும் அதன் காரணம் குறித்தும் அறிந்து கொள்ள வந்திருப்பதாக நண்பர்களிடம் சொல்கிறார்.
அதே சமயம் எந்த ஜல்லிக்கட்டுக்காக தனது தந்தை சமுத்திரக்கனி உயிரை விட்டாரோ, அந்த ஜல்லிக்கட்டை பல ஆண்டுகளாக நடத்த முடியாத அளவுக்கு ஊரே பிளவு பட்டு இருப்பதை தெரிந்து கொள்கிறார். இதையடுத்து அந்த ஊர் மக்களின் சப்போர்ட்டை வாங்கி ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த சண்முகப்பாண்டியன் எடுக்கும் முயற்சிக்கு அதே ஊரில் உள்ள இரு பிரிவினர்களின் தலைவர்களான வேலராமமூர்த்தி மற்றும் மைம்கோபி ஆகியோர் இடைஞ்சல் கொடுக்கின்றனர். இந் நிலையில் தனது தந்தையை கொலை செய்த உண்மையான குற்றவாளியையும் அவர் கண்டுபிடிப்பதும். ஜல்லிக்கட்டை நடத்தி காண்பித்தாரா? என்பதுதான் மிச்ச கதை.
உலக அளவில் பிரளயத்தை கிளப்பிய ஜல்லிக்கட்டு பின்னணியின் உருவான கதையை கொஞ்சம் வேறு ட்ராக்கில் காட்டி ஹிட் அடிக்க முயன்றுள்ளார் இயக்குநர். அதற்காக பெரும்பாலான காட்சிகளில் இன்றைய பெரும்பாலானோர் கலந்து கொண்ட மெரீனா போராட்டம் தொடங்கி ஆக்டர் விஜய் பேசியதையெல்லாம் இடைச் செருகலாக்கி தன் கையில் கிடைத்த சம்முவபாண்டியனை ஹீரோவாக்க பெரும் பிரயத்தனம் செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அதே சமயம் படத்தின் இயக்குனர் ஒளிப்பதிவாளர் என்பதால் படத்தின் ஒளிப்பதிவு நச்..
நாயகனான ஷண்முகபண்டியன் அறிமுகமான சகாப்தம் படத்தை விட பெட்டர்தான் . ஆனால் சினிமாவுக்கான மெனக்கெடல் ரொம்பக் குறைச்சல். பாடல் காட்சிகளில் பாக்கியராஜை நினைவுப் படுத்தும் விதத்தில் குனியாமல் எக்சர்சைஸ் செய்து – இதுதான் டான்ஸ் என்று நம்ப வைக்க முயல்வதும், உணர்சிகளைக் காட்ட வேண்டிய இடத்தில் கூட தேமே என்று இருப்பதும் நெருடலாக இருக்கிறது. ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் மீனாட்சி, மதுரைப் பொண்ணாகவே மாறி இருக்கிறார். சமுத்திரகனி ஏனோ முழுமையாக ஒட்டாமல் அதே சமயம் தன் மேல் பழி ஏதும் வராத அளவுக்கு தன் பங்களிப்பை செய்துள்ளார். ஆனாலும் ஒரு இயக்குநர் தன் எல்லைக்கு என்ன செய்ய முடியுமே அதை செய்து தாஅன் ‘தொழில்காரன்’ என்று முத்திரை வாங்கி விட்டார்