June 9, 2023

வழக்கமான ரவுடி கும்பல் மோதல் சம்பவம் என்று காவல் துறையும் செய்தி ஊடகங்களும் முடிவுக்கு வந்த ஒரு அசம்பாவிதத்துக்குப் பின்னால் புதைந்துகிடக்கும் மர்மங்களைப் புலனாய்வு செய் யத் தொடங்குகிறார் பத்திரிகையாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் கிராமத்தில் நிகழும் சம்பவத்தின் ஊற்றுக்கண்ணைத் தேடும் பாதையில் படம் பல கிளைக் கதைகளாக விரிகிறது. கடல் அலையில் கரை ஒதுங்கும் மர்மமான சிலை, கொல்கத்தா கடத்தல் கும்பலைச் சேர்ந்த ராஜ் பரத், நண்பனின் மரணத்துக்குக் காரணமானதால் குற்ற உணர்வில் ஊரைவிட்டு மணப்பாடுக்கு வந்துசேரும் நட்டி நட்ராஜ்.. இப்படி குறுக்கும் நெடுக்குமாக ஏகப்பட்ட கதைகள். இத்தனை கதைகளுக்கும் கதை மாந்தர்களுக்கும் ஒருவனோடு தொடர்பு இருக்கிறது. அவன்தான் ரிச்சி.

‘‘அட எப்போதான்யா அந்த ரிச்சியக் காட்டுவீங்க!’’ என்று திரையரங்கமே எதிர்பார்த்து அரை மணி நேரம் காத்திருந்து சோர்ந்துவிடுகிறது. அதற்கு அப்புறமாக, அதுவும் ஏற்கெனவே பல படங்களில் பார்த்ததுபோல, தாதாவிடம் மகனைப் போல வளர்ந்த அடியாளாக ‘மாஸ் என்ட்ரி’ கொடுத்து கடுப்பேற்றுகிறார் நிவின் பாலி.

கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி இயக்கி நடித்த ‘உளிதவரு கண்டந்தே’ படம்தான் தமிழில் ரிச்சி. மங்களூரு கடற்பகுதியை ஒட்டி நிகழும் சம்பவங்களை அலை வாசனை கமழ பதிவு செய்த படம் அது.

மங்களூருவை தூத்துக்குடியாக ரீமேக் செய்ததைத் தவிர இயக்குநர் கவுதம் ராமசந்திரன் வேறு எதுவும் மெனக்கெடவில்லை. இதனால், மூலக்கதையில் இருக்கும் அழுத்தமும், திரைக்கதையின் திருப்பங்களும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் தமிழில் மிஸ்ஸிங்.

கதாபாத்திங்கள் மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புலியாட்டம் போன்ற பண்பாட்டு அம்சங்களும், அந்நியத் தன்மை நிறைந்த வசனங்களும் படத்தில் ஒட்டவில்லை.

நிவின்பாலி, தான் அனுபவித்த தண்டனைக்கு காரணம் யார் என்பதை அப்பா பிரகாஷ்ராஜ் உட்பட யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளே வைத்துக்கொண்டு ரவுடியாக திரியும் இடங்களில் மிரட்டுகிறார்.

ஆனால், செயற்கைத்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் அவரது கடும் உழைப்பு எடுபடவில்லை. அவரே பேசியுள்ள டப்பிங் முழுவதும் மலையாள நெடி.

கிறிஸ்தவப் பாதிரியாரின் (பிரகாஷ் ராஜ்) மகனான ரிச்சர்ட், ரவுடியாகக் காரணம் அவருக்கும், ராஜ் பரத்துக்கும் இடையே எதிர்பாராமல் நிகழ்ந்த சிறுபிராயத்து ஃபிளாஷ்பேக். அதுதான் படத்தின் உயிர்நாடியான கதை.

அவர்களுக்கு இடையே உள்ள நட்புக்கும் துரோகத்துக்குமான போராட்டத்தில் பல கதாபாத்திரங்கள் இழையோடுகின்றன. ஆனால், உண்மையில் அந்த துணை கதாபாத்திரங்கள்தான் படத்துக்கு பெரும் ஆறுதல்.

தனக்கு அன்பும் ஆதரவும் அளிக்கும் நண்பனின் தங்கை லட்சுமி பிரியாவிடம், எப்படியாவது தன் காதலைச் சொல்லத் துடிக்கும் தவிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார் நட்ராஜ்.

நட்பு, காதல், ஏக்கம் என அத்தனையிலும் அவரும் லட்சுமி பிரியாவும் கடற்கரைக் காற்றாக வருடுகிறார்கள்.

அதுபோல, ரிச்சி கூடவே சுற்றித் திரியும் ‘ஆடுகளம்’ முருகதாஸ், பீட்டராக வரும் இளங்கோ குமாரவேல், துளசி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் பலம்.

ஆனால், எல்லோரது பகுதிகளும் அழுத்தமின்றி, முழுமை பெறாமல் ஏனோதானோ என்று நகர்வது கதை ஓட்டத்துக்கு பெரிய தள்ளாட்டம்.

தூத்துக்குடியின் உப்புக் காற்று நம் நாவில் கரிக்கும்படி தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது பாண்டிக்குமாரின் கேமரா.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டுகிறது. பலவீனமான திரைக்கதையை இவை இரண்டும்தான் ஓரளவு தாங்கிப் பிடிக்கின்றன.

சூழ்நிலை ஒருவனை எளிமையாக திசை மாற்றிவிடும் என்ற ஒரு வரி கருத்தை, வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் திரையில் விரிக்கும் முயற்சியை வரவேற்கலாம்.

கதையில் இருக்கும் அழுத்தத்தை, திரைக்கதை, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, படமாக்கலிலும் படர விட்டிருந்தால், ‘ரிச்சி’, ‘ரிச்’சாக மனதில் நின்றிருப்பான்!