அந்தமான்& நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி!

நம் நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின் 126ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நேதாஜி பிறந்தநாளை பராக்ரம் திவஸ் என்ற பெயரில் அரசு நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நேதாஜி பிறந்தநாளில் அவரையும் நாட்டின் ராணுவ வீரர்களையும் பெருமை படுத்தும் விதமாக அந்தமானில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு 21 ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ராணுவத்தின் மிக உயரிய விருதானது பரம்வீர் சக்ரா விருது. போர்களத்தில் மிக தீரமான சாகசத்தை செய்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசு இந்த பரம்வீர் சக்ரா விருதை வழங்குகிறது. இந்த விருதை இதுவரை 21 ராணுவ வீரர்கள் பெற்றுள்ளனர்.
21 தீவுகளில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டது. அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ சந்திரபோஸ் தீவில் அமைய உள்ள அவரது நினைவகத்தின் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”அந்தமான் நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு தனது முன்முயற்சியின் மூலம் பிரதமர் மோடி பெயர்களை வைத்துள்ளார். இந்த தீவுகளுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம், அவர்களின் தியாகம் பூமி உள்ளளவும் நீடித்து நிலைக்கும். அதோடு, இதன்மூலம் நமது ராணுவத்தின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.
https://twitter.com/aanthaireporter/status/1617413463307079681
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”அந்தமான் – நிகோபாரின் 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதாளர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம் நாம் அளிக்கும் செய்தி ஒன்றுதான். ‘ஒரே பாரதம்; சிறந்த பாரதம்’ என்பதுதான் அது. பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் ஒரே தீர்மானம் ‘முதலில் இந்தியா’ என்பதுதான். அவர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம் அவர்களின் தீர்மானம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்” என தெரிவித்தார்.