June 2, 2023

சீனாவில் ஆலங்கட்டி மழை, பனி மழை, உறை பனியால் மாரத்தான் வீரர்கள் 21 பேர் பலி!

கொரோனாவை உலகுக்கு வழங்கிய சீனாவில் 100 கி.மீ தூர மலை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் 21 பேர், தட்பவெட்ப நிலை மாற்றத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கன்சூ மாகாணத்தில், மலைகளின் மீது ஓடும் 100 கி.மீ தூர அல்ட்ராமாரத்தான் ஓட்டப் பந்தயம் நேற்று மாலை தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஓட்ட பந்தயம் தொடங்கிய சில மணி நேரத்தில், திடீரென எதிர்பாராத விதமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டது. அதனால், ஆலங்கட்டி மழை, பனி மழை, உறை பனி கடுமையாக பெய்துள்ளது.

பங்கேற்ற வீரர்களில் சிலர், உடனடியாக உதவி வேண்டி எங்களுக்கு தகவல் அனுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும், மீட்பு பணிக்காக ஒரு குழுவினரை அனுப்பி, உடனடியாக வழியிலேயே 18 பேரை மீட்டு வந்தோம் என்று, அந்த நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும், தட்பவெட்ப நிலை மாறுதல் காரணமாக ஏற்பட்ட ஆலங்கட்டி மழை, உறை பனி, அதிக காற்று ஆகியவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாததால், உடல்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் அல்ட்ரா மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் மலை தடங்களிலயே இறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை வரை, அல்ட்ரா மாரத்தான் ஓட்ட வழித்தடத்தில் இருந்து இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட 151 பேர் நலமுடன் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.