இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு “: மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று மருத்துவத் துறைக்கும், இன்று இயற்பியல் துறைக்கும் நோபல் பரிசு ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோஸ்-க்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கும் வழங்கப்படுகிறது.
ரோஜர் பென்ரோஸ்-க்கு விருதின் பரிசுத் தொகையில் 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படுவதாக ராயல் ஸ்வேதிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, வரும் 7-ம் தேதி நாளை வேதியியல், 8ம் தேதி இலக்கியம், 9ம் தேதி அமைதி, 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.