நேற்று இந்த நேரம் – விமர்சனம்!

நேற்று இந்த நேரம் – விமர்சனம்!

ஹீரோ ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் உள்ளிட்ட நண்பர்கள் ஜாலி என்ற பெயரில் டைம் பாஸ் செய்ய ஊட்டி செல்கின்றனர். போன இடத்தில் அவர்களுக்குள் காதல் மோதல் என சில சில்லறை ரகளைகள் நடக்கின்றன. அந்த மோதலுக்குப் பிறகு ஷாரிக் ஹாசன் திடீரென்று மிஸ் ஆகி விடுகிறார். அதுபற்றி போலீசில் புகார் அளிக்க, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் மாயமாகி விடுகிறார். . மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘நேற்று இந்த நேரம்’.

நாயகன்களில் ஒருவராக வருகிற ‘பிக் பாஸ்’ ஷாரிக் ஹாசன் சதா போதையில் மிதக்கிறார்; ஆனாலும் ஏகப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான வேடம்.அதைப் புரிந்து நடித்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

ஹீரோயின் ரோலில் வரும் ஹரிதா படத்தில் வரக்கூடிய பல கதாபாத்திரங்களில் ஒருவராக இருந்தாலும் தன்னைத் தனித்துத் தெரிய வைக்க வேண்டும் என்று நினைத்து உருப்படியாக நடித்திருக்கிறார்.

அரவிந்த்,திவாகர் குமார்,நிதின் ஆதித்யா,மோனிகா ரமேஷ்,காவ்யா அமிரா ஆகியோரும் குறைவில்லை.காவல்துறை விசாரணையின்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதைக் காட்டுகிறார்கள்.

கேமராமேன் விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருந்தாலும், எடிட்டர் கோவிந்த், கையில் கத்திரி எடுக்காமல் இயக்குநர் எடுத்த காட்சிகளை அப்படியே தொகுத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்

கதையை எழுதி இயக்கி இருக்கும் சாய் ரோஷன் கே.ஆர், ஸ்கிரிப்ட் அளவில் நன்றாகவே எழுதி இருக்கிறார் ஆனால் ஒரு இயக்குனராக அதைப் படமெடுக்கும் போதுதான் பட்ஜெட் பற்றாக்குறையாலோ என்னவோ சாதாரணமாகப் படமாக்கி விட்டார். குறிப்பாக ஒரே சம்பவத்தை பல கோணங்களில் விவரித்து , திரைக்கதையை வித்தியாசமாக கையாண்டிருந்தாலும், ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது ரசிகர்களுக்கு தூக்கத்தை வர வைத்துவிடுகிறது.அத்துடன் இடையில் வரும் சைக்கோ கொலையாளி உள்ளிட்டவை படத்தின் நீளத்தை அதிகரித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து விடுகிறார்.

மொத்தத்தில் – நேற்று இந்த நேரம் – சரியில்லை

மார்க் 2/5

error: Content is protected !!