செய்தியைக் கேட்க / Listen to News
முதியோர்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. குறிப்பாக கண்புரை நோய், மூட்டு வலி, ஆஸ்மா, இதய நோய், நீரிழிவுநோய், இரத்த அழுத்தம்,புரோஸ்டேட் வீக்கம், மன அழுத்தம், மனச் சோர்வு, காது கேட்புத் தன்மை குறைவு, நினைவாற்றல் குறைவு ஆகிய நோய்களால் பாதிக்கப்படும் முதியோர்கள் அதிகம். இந்த நோய்களால் அவர்களது அன்றாடச் செயல்பாடு மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. இது இன்றைய இயந்திர வாழ்க்கை, குடும்பச் சூழ்நிலையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. குறிப்பாக தேவையான மருத்துவ சிகிச்சைக்கு எவரும் அழைத்துச் செல்ல இயலாத நிலையில் பெரும்பாலான முதியவர்கள் உள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 101 வயது இந்திய பாட்டி 74 நொடிகளில் ஓடிக்கடந்து சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் என்ற பெயரில் முதியோர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மான் கவுர் என்ற 101 வயதான மூதாட்டி 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். 100 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இவருடன் யாரும் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இல்லை. இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் அவரை ஓட சம்மதித்தனர்.
தீவிர மருத்துவ பரிசோதனைக்குப்பின் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார் மான் கவுர். இவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் (74 நொடிகளில்) கடந்து தங்க பதக்கம் வென்றார். அவரது மகனுடன் சேர்ந்து ஏராளமான தடகள போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், இரண்டு கிலோ எடையுள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடைகொண்ட ஈட்டி எறிதல் போட்டிகளிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தான் பெற்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளார்.
93 வயது வரை மான் கவுர் தடகளத்தில் கலந்து கொண்டது கிடையாது, அவரது மகன் குர்தேவ் சிங், சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டி வட்டாரத்தில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தினார். இதனடிப்படையில்தான் தடகளத்தில் பங்கேற்று வருகிறார் கவுர்.
* முதிய வயதில் தடகளப்போட்டியில் பங்கேற்று வரும் கவுர் இதோடு 17வது தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
* உலக மாஸ்டர்ஸ் போட்டியில் மொத்தம் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்கள் கவுரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
தங்கப்பதக்கம் வென்றது குறித்து மான் கவுர் கூறியதாவது: இந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றதை நான் மிகவும் விரும்பி செய்தேன். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தொடர்ந்து ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். அதை விட்டுக் கொடுக்கப்போவது இல்லை. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன். அதற்கு முற்றுப்புள்ளி இல்லை.

