யார்., யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை?- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

யார்., யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை?- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட்டின் போது வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். ஆனால அதை அடுத்து வெளியான தகுதி வாய்ந்த மகளிர் என்ற வாக்கியம் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை என எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. எந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த மகளிர் தேர்ந்தெடுப்பீர்கள் என அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பிருந்தனர். அதன்படி இன்று சட்டப்பேரவையில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, “மகளிர் உரிமைத்தொகை அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்குமா?” என்னும் கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மக்களுக்கான பல நல்லத்திட்டங்களை இந்த அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உன்னத திட்டமான மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் உழைத்து வந்தார்கள். ஆனால் மதத்தின் பெயராலும், ஆதிக்க வர்க்கத்தாலும் பெண்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டார்கள்.

பெரியாரின் வீறுக்கொண்ட பெண் விடுதலை போராட்டமே, பாதை அமைத்தது. திராவிட இயக்கங்களின் அயராத உழைப்பின் காரணமாக பெண்கள் உயர்கல்வி செல்ல முடிந்தது. அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்களின் உழைப்பிற்கு முன்னால் பெண்களின் உழைப்பு சளைத்தது அல்ல என்பது நம் அனைவரது கண்முன்னே நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ஒதுக்கியதும் எத்தனை மகளிர் பயன்பெறுவார்கள் என சிலர் மனக்கணக்கு போட்டு வருகிறார்கள். வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு அளிக்கும் அங்கீகாரம் இந்த உரிமைத் தொகை.

இந்த மகளிர் உரிமைத்தொகையானது தேவைப்படும் மகளிர் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறுக்கடைகள், சிறிய நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிப்புரியக் கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் உழைக்கும் பெண்கள் இந்த திட்டத்தால் பலன்பெறுவார்கள்.

இந்த திட்டத்திற்கான வழிக்காட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த திட்டம் செயல்படுத்த முடியுமா? நிதி எங்கிருந்து வரும் என கேள்விகளை எழுப்பி, திமுக இதனை செய்து விடுமோ என தங்கள் அச்சத்தை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே இந்த திட்டம் முன்னோடி திட்டமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!