ராஜ்நாத் மேட்டர்: என்னதான் பின்னணி? By கதிர்

ராஜ்நாத் மேட்டர்: என்னதான் பின்னணி? By  கதிர்

100 நாள் முடிவதற்குள் நியூஸ் டீவி சேனல்களுக்கு இந்த சான்ஸ் கிடைக்கும் என நான் எதிர்பார்க்க வில்லை.ராஜ்நாத் சிங் இந்தியாவின் உள்துறை அமைச்சர். அவர் பிரதமரை சந்தித்து புகார் சொல்கிறார். என் மகனை பற்றி நம்மாள் ஒருத்தர் மோசமாக வதந்தி பரப்புகிறார் என்று. வெளியே வந்தவர், தன் கட்சிக்குள்ளேயே, அரசுக்குள்ளேயே இருக்கும் முக்கியமான ஒருவர்தான் தன் மகனை பற்றி வதந்தி கிளப்புகிறார் என்பதை உடைத்து சொல்கிறார்.அதோடு நிற்கவில்லை. அந்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலுக்கு முழுக்கு போட்டு வீட்டுக்குள் முடங்குவதாக சவால் விடுகிறார்.யாருக்கு சவால்? என்ன அந்த வதந்தி? எந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சொல்கிறார்? எதுவும் தெரியவில்லை. யாரும் சொல்லவில்லை.
rajnath-singh-
ராஜ்நாத் சிங் வெளியேறிய அரை மணி நேரத்துக்குள் பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது. அமைச்சர்கள் பற்றியும் உள்துறை அமைச்சர் மகனை குறித்தும் உலா வரும் வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது. அவ்வாறு வதந்தி கிளப்புவது நாட்டு நலனுக்கு எதிரானது என்கிறது அறிக்கை.

அடுத்த அரை மணி நேரத்தில் பிஜேபி தலைவர் அமித் ஷா அறிக்கை விடுகிறார். பிரதமர் அறிக்கையை அப்படியே பிரதிபலிக்கிறது அது. சில ஊடகங்கள் உள்நோக்கத்துடனோ தெரியாமலோ வதந்திகளுக்கு உயிர் கொடுப்பதாக அமித் சொன்னது மட்டும் எக்ஸ்ட்ரா.

ஆர்.எஸ்.எஸ் தலைவரையும் சந்தித்து ராஜ்நாத் முறையிட்டதாக செய்தி பரவுகிறது. உடனடியாக அந்த செய்தியை ஆர்.எஸ்.எஸ் மறுக்கிறது.

சீனா, பாகிஸ்தான், இலங்கை, இஸ்ரேல், பாலஸ்தீன் நாடுகள் சம்பந்தப்பட்ட சிக்கலான மேட்டர்களில் விளக்கம் தர பிரதமர் அலுவலகம் இந்த அவசரம் காட்டவில்லை. இந்தியாவில் உள்ள எல்லாரும் இந்துதான் என்று மோகன் பகவத் சொன்னதற்கு அமித் ஷா இவ்வளவு வேகமாக விளக்கம் சொல்லவில்லை. கறை படிந்த அமைச்சர்களை ஒதுக்கி வைப்பது பிரதமரின் பொறுப்பு என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதற்கு இவர்களில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. ராஜ்நாத் மேட்டரில் மட்டும் இத்தனை அவசரம், வேகம், ஒற்றுமை ஏன் வந்தது?

ராஜ்நாத் சிங் பிஜேபி தலைவராக இருந்தவர். அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த இடம் தரப்படும் என நம்பிக் கொண்டிருந்தவர். ஆனால் கிடைக்கவில்லை. தான் வெளிநாடு போயிருக்கும் நேரத்தில் அமைச்சரவை கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவது என்பதை மோடி முடிவு செய்யவில்லை. அதனால் அமைச்சரவையில் நம்பர் 2யார் என்ற கேள்வி அப்படியே தொங்குகிறது.

நிதி, பாதுகாப்பு ஆகிய இரண்டு முக்கிய துறைகளை வகிக்கும் அருண் ஜேட்லியை நம்பர் 2 ஆக்க மோடி விரும்புகிறார் என்பது கட்சியில் அடிமட்டம் வரை அடிபடும் பேச்சு. ராஜ்நாத்தை மீறி அருணை கொண்டு வருவது நன்றாக இருக்காது என்றும் பேச்சு இருக்கிறது. ஆகவே ராஜ்நாத்தின் செல்வாக்கை குறைக்கும் விதமாக இந்த வதந்திகள் பரப்பி விடப்பட்டு இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் சந்தேகிக்கிறர்கள்.

நிதின் கட்கரி ப்ஜேபி தலைவராக இருந்தவர். சட்டவிரோதமான சர்க்கரை, உருக்கு ஆலைகளில் பினாமியாக முதலீடு செய்து தாராளமாக சம்பாதிக்கிறார் என்று அவர் மீது புகார்கள் கிளம்பின. அது முதலில் புறப்பட்ட இடம் குஜராத். கட்கரி ராஜினாமா செய்ய நேர்ந்தது. பிறகு விசாரணை நடந்து அவர் நிரபராதி என்று தெரிய வந்தது. அந்த தீர்ப்பு பரப்பபடவில்லை. அதனால் அவர் மீதான களங்கமும் முழுமையாக துடைக்கப்படவில்லை. இப்போது அவர் மத்திய அமைச்சராக பதவி ஏற்கும்போதுகூட அந்த விவகாரம் கிளம்பி அவரை நோகடித்தது. அது போன்ற நிலைக்கு ராஜ்நாத் சிங் ஆளாக்கப்படலாம் என்று ஒரு தரப்பு எதிர்பார்க்கிறது. கட்கரிக்கு முன்னால் தலைவராக இருந்த
பங்காரு லட்சுமணனும் ஊழல் புகாரில் சிக்கி பதவி இழந்தவர்.

உள்துறை அமைச்சர் பதவி பெரியது. முக்கியமான பதவிகளில் ஆட்களை நியமிப்பதில் அவருக்கு பங்குண்டு. அப்பாயின்மென்ட்ஸ் கமிட்டியில் அவரது பங்கு பிரதானம். ஆனால் ராஜ்நாத் சிங்குக்கு தனது உதவியாளரை நியமிக்கும் அதிகாரம்கூட மோடியால் தரப்படவில்லை. நியமனங்கள் சம்பந்தமான அனைத்து ஃபைல்களையும் மோடியே பார்த்து தீர்மானிக்கிரார். ராஜ்நாத் கையெழுத்து போடுவதோடு சரி. இதனால் அவர் மன உளைச்சலில் இருக்கிறார் என செய்திகள் வெளிவந்தன. யாரும் மறுக்கவில்லை.

ராஜ்நாத்தின் மகன் பங்கஜ் சிங். உத்தர பிரதேச பிஜேபியின் பொது செயலாளர். முலாயம் மகன் அகிலேஷ் போல ஒருநாள் அங்கு முதல்வராக வர வேண்டும் என்று ஆசை கொண்டவர். தப்பில்லை. சமீபத்தில் நொய்டா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. பங்கஜ் போட்டியிட மனு கொடுத்தார். ராஜ்நாத் சப்போர்ட் செய்தார். மோடியும் அமித்தும் கண்டுகொள்ளவில்லை. 62 வயது பெண்மணிக்கு டிக்கெட் கொடுத்தனர். இது தனக்கு அவமானம் என ராஜ்நாத் நினைத்தார்.

மற்றவர்கள் அப்படி நினைக்கவில்லை. மேனகா காந்தி மகனுக்கு மோடி+அமித் கொடுத்த ட்ரீட்மென்ட் அவர்களுக்கு தெரியும். கட்சி நலன் என்று வரும்போது தனி நபர்கள் நலனெல்லாம் இரண்டாம் பட்சம் என்ற மோடி+அமித் கொள்கை மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது.
சீனியர்களுக்கு மோடி மதிப்பு தருவதில்லை என்ற புகாரையும் ராஜ்நாத் சொல்ல இயலாது. அத்வானியும் ஜோஷியும் கட்சி குழுக்களில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்பட்ட பின்னர் ராஜ்நாத் தனக்கென பெரிய மரியாதையை எதிர்பார்ப்பது வீண். அவருக்கும் தெரியும். கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவை தெரிவித்தபோது சீனியர்கள் எல்லாரும் எதிர்த்தது ரகசியம் இல்லையே. அவர்கள் ஒவ்வொருவராக இப்போது ஓரம் கட்டப்படுகிறார்கள்.

அடுத்த ரவுண்ட் சட்டசபை தேர்தல்கள் வரும்போது எல்லா மாநிலங்களிலும் கட்சியை இளைஞர்கள் கையில் கொடுத்து அடிகாரத்தை முழுமையாக அமித் கையில் வைத்திருக்க வேண்டும் என மோடி விரும்புகிறார். முக்கியமாக உத்தர பிரதேசத்தில். அங்கு ராஜ்நாத்தும் அவரது மகனும் ஆதிக்கம் செலுத்தினால் புது ரத்தம் பாய்ச்சுவது கடினம் என அமித் கருதுகிறார். ராஜ்யசபாவில் மெஜாரிட்டி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற ஒன் பாயின்ட் அஜெண்டாவை மோடி குறித்து கொடுத்திருக்கிறார். அதை நோக்கி பார்வையை பதித்து விட்டார் அமித். அதற்கு இடையூறாக இருப்பவர்களை அப்புறப்படுத்த அவர் தயங்க போவதில்லை.

கல்யாண் சிங் இருந்தார். அவரை பேக் செய்து கவர்னராக அனுப்பி விட்டார்கள். ராஜ்நாத்தை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் இருந்தார்கள். பங்கஜ் சிங் விவகாரம் கிளம்பியது.

போலீஸ் உயர் அதிகாரிக்கு போஸ்டிங் போட கணிசமான தொகை கைமாறியதாக முதலில் வதந்தி புறப்பட்டது. அப்படியே கண் மூக்கு காது எல்லாம் சேர்ந்தது. `ஒருநாள் திடீரென ராஜ்நாத்தையும் பங்கஜையும் மோடி அழைத்தார். என்ன நடந்தது என்று கேட்டு, பங்கஜ் பதில் சொல்வதற்குள் அந்த தொகையை திருப்பி கொடுத்து விடு என்று உத்தரவிட்டார். அதிர்ச்சியுடம் அப்பாவும் பிள்ளையும் விடை பெற்று செல்லும்போது, இனிமேல் உன்னை பற்ரி எந்த புகாரும் வரக்கூடாது என்று மோடி உரத்த குரலில் உத்தரவிட்டார்` என்று டெல்லி பேப்பர்களில் கிசுகிசு பாணியில் செய்தி வெளியானது.
ஒரிஜினல் வதந்தி கிளம்பி இன்றோடு 22 நாள் ஆகிறது. ராஜ்நாத் இது தானாக ஓய்ந்து விடும் என நினைத்தார். ஓயவில்லை. டீவியில் எந்த சேனலை தட்டினாலும் இந்த வாதம்தான்.

வழக்கம்போலவே யார் சொல்வதையும் தெளிவாக கேட்க முடியவில்லை. தலைப்பு செய்திகளுக்கு பஞ்சமே இல்லாத நாட்டில் ஒரு வதந்தி 22 நாள் உயிருடன் உலா வருகிறது என்றால், பெரிய பின்னணி இருக்க வேண்டும் என சந்தேகித்தார். அவரளவில் புலனாய்வு செய்ததில் சந்தேகம் உறுதியானது. ஆகவேதான் பிரதமரை சந்தித்து புகார் கூறியுள்ளார்.

மகன் மீதான அபாண்டத்தை கண்டிக்க தவறினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அவர் பிரதமரிடம் கூறியிருக்கலாம். அதனால் உடனடியாக பிரதமர் அலுவலகம் செயல்பட்டிருக்கலாம்.
பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டு சீனியர் அமைச்சர்கள் இடையே மோதல் ஏற்படுவது துரதிர்ஷ்டம். எனினும் இது புதிதல்ல. மன்மோகன் அரசின் கடைசி கட்டத்தில் பிரணாப் முகர்ஜிக்கும் சிதம்பரத்துக்கும் மவுன யுத்தம் நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்தன. பிரணாப் ஜனாதிபதியான பிறகுதான் அடங்கின.

வெளிப்படை செயல்பாடு என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த பிஜேபி அந்த வாக்குறுதிக்கு தகுந்தபடி இதுவரை நடக்கவில்லை. அது வருந்தத் தக்கது. இதெல்லாம் இல்லை என்றால் இந்திய அரசியல் போரடிக்குமே என்ற கவலையும் கூடவே எழுகிறது.

கதிர் (ஒன்றும் ஒன்றும் மூன்று: 27.08.2014)

Related Posts

error: Content is protected !!