மோடி அரசின் கவனத்திற்கு…!

மோடி அரசின் கவனத்திற்கு…!

சுதந்திர இந்தியாவில், இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சராசரியாக 66 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த மக்களின் எதிர்பார்ப்பு என்ன? மிக முக்கியமாக அவர்கள் எதிர்பார்ப்பது விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்புகள் உருவாகப்பட வேண்டும் என்பதுதான்.மே மாதம் 15ஆம் தேதி அறிவிப்பின்படி, மொத்த விலைகள் அடிப்படையில், மார்ச் மாதம் பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் மாதம் அது 5.2 சதவீதமாக குறைந்தது. ஆனால், சில்லறை விலைகள் அடிப்படையில், பணவீக்கம் மார்ச் மாதம் 8.3 சதவீதமாகவும், ஏப்ரல் மாதம் 8.6 சதவீதமாகவும் அதிகரித்தது.ஒட்டுமொத்த உணவுப் பொருள்களின் அடிப்படையில், பணவீக்கம் மார்ச் மாதம் 9.9 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 8.64 சதவீதமாக குறைந்தது.இதில் வேதனை அளிக்கும் விஷயம் என்னவெனில், மேலே கூறியபடி பணவீக்கம் விகிதம் குறைந்தாலும், விலைவாசி குறையவில்லை. காரணம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வு; இரண்டாவதாக, பருவமழை அளவு குறைய வாய்ப்பு உள்ளது என்கிற செய்தி. இவை இரண்டும் பொருள்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் பணவீக்க விகிதம் குறைந்தும் விலைவாசி குறையவில்லை.
modi cartoon 2
இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரம், தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையின் அடுத்த ஏற்றம் தள்ளிப் போடப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய அரசுக்கு இதுவே மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பது வெளிப்படை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு புதிய அரசு முன்வர வேண்டும். குறிப்பாக, பெட்ரோல் விலையை பெட்ரோலியக் கம்பெனிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முந்தைய அரசின் கொள்கை முடிவு ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.

பருவமழை பொய்த்து வறட்சி ஏற்பட்டாலோ, அதிக மழையால் வெள்ளம் ஏற்பட்டாலோ, உணவுப் பொருள்களின் பற்றாக்குறையால் விலை உயர்வது புரிந்து கொள்ளக்கூடியதே. சமீபத்தில் வெங்காயம் விலை உயர்வு இதற்கு உதாரணமாகும். அது போன்ற காலங்களில் அவற்றின் ஏற்றுமதிக்கான விதிமுறைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

ஏற்றுமதிக்கான தடை உத்தரவு உடனடியாக பிறப்பிக்கப்பட வேண்டும். மாறாக, இறக்குமதிக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், தட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருள்களை லாபநோக்குடன் பதுக்கி வைக்கும் பதுக்கல்காரர்களையும் சமூக விரோதிகளையும் கண்காணித்து தண்டிக்க வேண்டும்.

உணவுப் பொருள்கள் உபரியாக இருக்கும்போது அவற்றை பாதுகாத்து எதிர்கால பயன்பாட்டுக்கு சேமிக்கும் வகையில் மேலும் புதிய, குளிர் சாதன பண்டசாலைகளை அமைத்து அவற்றின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகளும், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு பெரிய அளவில் இந்த கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் பண்டசாலைகளில் உணவு தானியங்கள் மக்கி, மடித்துப் போவதாக அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகள் மறைய வேண்டும்.

சில பயிறு வகைகள் நம்நாட்டில் விளைவது நமது தேவைக்கும் போதுமானது அல்ல. நமது பற்றாக்குறையை முழுவதுமாக தீர்ப்பதற்கு வெளிநாடுகளில் பயிரிடப்படுவதும் போதுமானது அல்ல. எனவே, உள்நாட்டில் அதற்கான விளைச்சலை அதிகரிப்பதற்கு, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, வேலைவாய்ப்புகள் உருவாக்கத்திற்கு, புதிய அரசு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். நடுத்தர மக்களை வெகுவாகப் பாதிக்கும் விஷயம் இது. வீட்டுக்குவீடு, படித்த இளைஞர்களும், யுவதிகளும், வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டு அலைந்து, திரிந்து சோர்வுடன் வீடு திரும்பும் காட்சியைப் பார்க்கும் பெற்றோரின் மன உளைச்சலைக் குறைத்திட புதிய அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை விரைந்து உருவாக்கிட வேண்டும்.

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6 சதவீதம் முதல் 8 சதவீதமாக இருந்தது. இதன் பயனாக, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக அது அமையாவிட்டாலும், ஓரளவு புதிய வேலைவாய்ப்புகள் உருவானது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறைகள் உள்ளிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகின. ஆனால் அதே காலகட்டத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கித் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்தன.

இதற்கு கணினி மயமாக்கமும் ஒரு காரணமாகும். ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, புதிதாக உருவான வேலை வாய்ப்புகள் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை.

அமைப்பு சாராத தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன என்றாலும், அந்த வேலைவாய்ப்புகளில், முறையான சம்பள விகிதங்கள், விலைவாசிப் படிகள், சலுகைகள், அடிப்படை உரிமைகள் என எதுவும் கிடையாது. காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அறவே இல்லை.

அமைப்பு சாராத பணிகளில் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலும், தாற்காலிக வேலை என்ற அடிப்படையிலும் உழைப்பை உறிஞ்சிவிட்டு குறைவான ஊதியமே வழங்கும் நியாயமற்ற போக்கு உருவானது. அது இப்போதும் நீடிக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அமெரிக்கப் பொருளாதாரம் ஓரளவு மீட்சி அடைந்து வருகிறது என்றாலும், அந்த நாட்டின் வளர்ச்சி இந்தியர்களுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்பு கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இந்தியாவில் தொழிற்சாலைகள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது தற்போதைய சுணக்கத்திற்கு ஒரு காரணம். அதிக வட்டி கொடுத்து வங்கிக் கடன் வாங்கி, தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு தொழிலதிபர்கள் தயாராக இல்லை.

அதிகவட்டிக்கு காரணம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி “ரெப்போ’ ரேட்டை (ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடன் வட்டி) குறைக்கத் தயங்குகிறது. வளர்ச்சியை முடுக்கிவிட, “ரெப்போ’ ரேட்டை குறைக்க பரிசீலனை செய்யவேண்டும்.

மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் தரவேண்டும். சிறு தொழில் உற்பத்திப் பொருள்களை மத்திய மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவீதம் கட்டாயமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விதி இருந்தாலும் ஏனோ அது முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இந்த விதி கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

ஏற்றுமதியைப் பொருத்தவரை, அமெரிக்கா, ஐரோப்பா தவிர புதிய சந்தைகளை இனம் கண்டு அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றுமதியாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். நியூசிலாந்து, கேமேன் தீவுகள், லட்டிவா, லித்துணியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகள் புதிய சந்தைகளாக சலுகைத் திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஃபோக்கஸ் சந்தை திட்டத்தில் மேலும் பல புதிய நாடுகளை இனம் கண்டு இணைத்திட வேண்டும். இதற்காக, மத்திய வர்த்தக அமைச்சகமும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையும், ஏற்றுமதியாளர் சம்மேளனமும் அவ்வப்போது சந்தித்து புதிய திட்டங்களை உருவாக்கிட வேண்டும். இதற்கு அரசு உதவ வேண்டும்.

இதன்மூலம் ஏற்றுமதியும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். விரைவில், வங்கித் துறையில் பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைய பேர் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். இது தவிர, மருந்து உற்பத்தி, புதிய மருத்துவ மனைகள் என மருத்துவத்துறையிலும், ஓட்டல்கள், சுற்றுலா துறை சார்ந்த தொழில்களிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

அண்மைக்காலமாக அன்னிய நேரடி முதலீடுகள் சுணக்கம் அடைந்ததற்குக் காரணம், அரசு கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் நேர்ந்த தாமதம்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இனிமேல் தாமதம் தவிர்க்கப்பட்டால், மீண்டும் அன்னிய நேரடி முதலீடுகள் வரத் தொடங்கும். அவற்றின் மூலம் படிப்படியான வளர்ச்சியையும், அதனைத் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிட முடியும். இப்போதைய தேவையெல்லாம், “பொலிடிகல் வில்’ எனப்படும் “அரசியல் மன உறுதி’ மட்டுமே!

எஸ். கோபாலகிருஷ்ணன்

படம் :economictimes.indiatimes.com

Related Posts

error: Content is protected !!