மு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே!

மு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே!

திமுகவிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தாத நிலையில், இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார் அவரது ஆதரவாளர் கபிலன்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுகவின் முன்னாள் செயலாளராக இருந்தவர் பெ.கபிலன். தீவிர அழகிரி ஆதரவாளரான இவர் அழகிரியின் வெளியேற்றத்துக்குப் பின் திமுகவில் ஓரம்கட்டப்பட்டார். குமரி மாவட்ட அழகிரி விசுவாசிகளில் முக்கியப் புள்ளியான இவர் இப்போது மு.க.அழகிரிக்கு இணையவழியில் உறுப்பினர் அட்டை பெற்று இருக்கிறார். அதிலும் உறுப்பினர் அட்டைக்கான முகப்புப் படம் தொடங்கி, அழகிரிக்கே உறுப்பினர் அட்டை வழங்கியது வரை திமுகவின் உறுப்பினர் சேர்க்கையையே இது விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து ‘பேசிய கபிலன், ”திமுக என்பது பொதுக்குழு உறுப்பினர்களை மட்டுமே கொண்ட இயக்கம் அல்ல. இப்போதும் தொண்டர்கள் அழகிரியின் அரசியல் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாகவும், கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறும் அழகிரி வெளிப்படையாகவே ஊடகத்தினர் முன்பு கோரிக்கை வைத்துவிட்டார். ஆனால், அதன்பின்பும் திமுக தலைமை அதைப் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் வடக்கில் இருந்து திமுகவுக்கு ஆலோசனை சொல்ல அழைத்து வரப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில், இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியது திமுக. இதில் அழகிரியின் பெயரில் உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்தேன். அதிலும் உறுப்பினர் அட்டைக்கான படத்தில் நானும், அழகிரி அண்ணனும் சேர்ந்து இருக்கும் படத்தை அனுப்பினேன். வீட்டு முகவரி தொடங்கி அத்தனையிலும் அழகிரி அண்ணனின் இல்ல முகவரியையே தந்தேன்.

தகப்பனார் பெயரில் மு.கருணாநிதி எனத் தெளிவாகக் குறிப்பிட்டேன். இத்தனைக்குப் பின்பும் அண்ணன் அழகிரி பெயரில் அழகாக உறுப்பினர் அட்டை வந்துவிட்டது. இப்படித்தான் இப்போது திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவில் முன்பு மிஸ்டு கால் கொடுத்து சேர்த்தார்களே, அப்படித்தான் இப்போது திமுகவில் நடக்கிறது. விட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில்கூட உறுப்பினர் அட்டை வாங்கிவிடலாம் போலிருக்கிறது.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அழகிரி அண்ணன் இப்போது திமுக உறுப்பினர் ஆகிவிட்டார். இனிமேல் இரண்டாம்கட்டத் தலைவர்கள் யாரும் அவரை திமுகவில் இல்லை என விமர்சிக்கவும் முடியாது அல்லவா? உண்மையில் திமுக எளிய மக்களை நெருங்கவேண்டும் என்றால் அண்ணன் அழகிரியை முறையாகக் கட்சிக்குள் சேர்த்து அங்கீகரிக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு இந்த இணையவழி சேர்க்கையெல்லாம் மக்களின் இதயத்தைத் தொடாது” என்றார்

error: Content is protected !!