June 4, 2023

மதத்தை தயவுசெய்து அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள்!

கர்நாடகாவில் துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கும். தேசியக் கொடியை ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றும் அளவிற்கும் நடந்து வரும் போராட்டங்களுக்கான அடிப்படையான விஷயம்.. அரசுப் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் தலையில் ஹிஜாப் அணிந்து வருவதை தடை செய்து போடப்பட்ட விதிமுறைகள். இது குறித்து சமூக ஊடகங்களில் நிகழ்ந்துவரும் வாத பிரதிவாதங்களில் ஹிஜாப், புர்கா போன்ற உடைகளை இஸ்லாமிய பெண்கள் அணிவதே சரியா, தவறா என்றும் தேவையில்லாமல் நீள்கிறது.

இஸ்லாமிய அமைப்புகளிலேயே இத்தகைய ஆடைகளை அணிவதும், அணியாமலிருப்பதும் குறித்து இரு தரப்பு கருத்துகள் உண்டு. தவிரவும் மதம் சொல்கிற நெறிமுறைகளின் படி அவற்றை அணிவதும் அணியாததும் தனி நபர் விருப்பம் மற்றும் சுதந்திரத்தில் வருகிறது. ஆகவே இந்த மதரீதியான உடை கோட்பாடு போன்ற அடிப்படையான விஷயங்களை விமரிசிக்கவோ, எதிர்க்கவோ எவருக்கும் உரிமையில்லை. குறிப்பாக மாற்று மதத்தினருக்கு இல்லை.

கல்வி நிறுவனம் என்று வருகிறபோது இத்தனை நாட்களாக அந்தப் பெண்கள் தொடர்ந்து வரும் ஒரு வழக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியத்தின் அல்லது அழுத்தத்தின் நோக்கம்தான் கவலையளிக்கிறது. இதற்குப் போட்டியாக நேற்று வரை நண்பர்களாக பழகிய சக மாணவர்களே காவித் துண்டு அணிந்து வந்து கோஷம் போடுவதும் போராடுவதும் ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற சிறப்பு மிகுந்த மதசார்பற்ற நமது நாட்டின் அடுத்த தலைமுறையான மாணவர்கள் மத்தியில் மதரீதியான துவேஷங்கள் ஏற்படுவதும், ஏற்படுத்துவதும் மிகுந்த கவலையளிக்கும் விஷயம். பிஜேபி ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் இந்தப் போராட்டங்கள் நிகழ்வதாலும், அரசுப் பள்ளிகளில்தான் இந்தத் தடை உத்தரவுகள் போடப்பட்டிருப்பதாலும் இது தன்னிச்சையாக நிகழ்ந்த எதார்த்தமான சம்பவம் என்று கருதமுடியாது.

நாங்கள் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று அடிக்கடி பிஜேபி தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். எல்லா மதத்தினரையும் சமமாகத்தான் நடத்துகிறோம் என்றும் பேசிவருகிறார்கள். சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் இல்லை என்று உத்தரவாதம் தருவதாக முழங்கிவருகிறார்கள். அவை உண்மை என்றால் கர்நாடகாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விரும்பத்தகாத மத அடிப்படையிலான மாணவர் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்களை மூத்த தலைவர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை அரசியல் சாசனத்திலும் , மேடைகளிலும் மட்டும் வார்த்தைகளாக வைத்திருக்கப் போகிறோமா அல்லது அரசின் அத்தனை செயல்பாடுகள் மூலமாக காட்டப்போகிறோமா என்கிற பெரிய கேள்வி மத நல்லிணக்கம் விரும்புகிறவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களை நெறிப்படுத்த.. நற்பண்புகளை வளர்க்க.. மனிதத்தை வளர்க்க பயன்பட வேண்டிய மதத்தை தயவுசெய்து அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்