பாரம்பரிய அறிவுக்கு இலக்கணமே வேறு!

பாரம்பரிய அறிவுக்கு இலக்கணமே வேறு!

என் வீட்டுக்கு ஒரு வைத்தியர் வருவார். அவருக்குத் தெரியாத மூலிகைகளே இல்லை எனலாம். ஒரு முறை என் காலில் வலி வந்தபோது, வெள்ளெருக்கு இலை வாங்கி வரச் சொன்னார். பிறகு, அடுப்பில் வைத்து சூடேற்றிய செங்கல் மேல் இந்த இலையை இருத்தி என் காலை இலையின் மேல் வைக்கச் சொன்னார். சூட்டினால் உயிர் போனாலும் வலி குணம் ஆயிற்று. எனக்குத் தெரிந்தவரிடம் இதைச் சொன்னேன். அவர், “இது என்ன அதிசயம். பால் வரும் செடியில் எல்லாம் இயற்கை ஸ்டெராய்ட் (steroid) இருப்பதால் வலி போயிற்று’ என்றார்.
trad knoledge

எனக்கு வியப்பு அடங்கவில்லை. எவ்வளவு விஷயங்களை நாம் பாரம்பரியமாக அறிந்து வைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் மறந்துவிடுவோமா? அந்த வைத்தியர் சொன்னார். “என் பசங்களுக்கு எந்த மூலிகை எங்கே இருக்கு என்று சொல்லிக் கொடுக்கலாம் என்றால் அவங்களுக்கு ஆர்வமே இல்லைம்மா’ என்று வருத்தத்துடன். டாக்டர் ஊசி போட்டார் என்பதில் இருக்கும் கெüரவம், வைத்தியர் கஷாயம் கொடுத்தார் என்பதில் இல்லை என்ற மனப்பதிவு நமக்கு நிரந்தரமாக ஆகிவிட்டது, என்ன செய்ய?

அறிவுசார் சொத்து பலவிதம். வர்த்தகக் குறி, காப்புரிமை, புவிசார் குறியீடு, பதிப்புரிமை – இது போல. அதில் பாரம்பரிய அறிவும் (Traditional Knowledge) ஒரு வகை. வைத்தியர் குறிப்பிடுவதும் பாரம்பரிய அறிவுதான். இன்றைய வர்த்தகமயமான உலகத்தில் அறிவுசார் சொத்துரிமை ஒருவரது தனி உடைமை. அது பதிவு செய்யப்பட்டு வேறு எவரும் அந்த உரிமையை அத்துமீறாமல் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், பொதுவான சொத்துரிமையின் அம்சங்கள் அனைத்தும் இதற்குப் பொருந்தாது. உதாரணத்துக்கு, ஒரு கண்டுபிடிப்பின் காப்புரிமைக்கு ஆயுள்காலம் 20 ஆண்டுகள்தான். பிதுரார்ஜித சொத்து தலைமுறை தாண்டி வரும். பதிப்புரிமைக்கு 60 ஆண்டு. பாரம்பரிய அறிவுக்கு இலக்கணமே வேறு. காப்புரிமை போல ஒருவரின் சொத்து அல்ல அது.

இந்த அறிவு ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது இனத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். இவர்களை ஆங்கிலத்தில் Indigenouspeople என்கிறார்கள். அந்தச் சொற்றொடருக்கு ஓர் அயலாதிக்க தொனி இருக்கிறது. நான் இங்கே மண் சார்ந்த மக்கள் என்று அவர்களைக் குறிப்பிடப் போகிறேன். அவர்கள் மலைகளையோ, மரங்களையோ சார்ந்தும் இருக்கலாம். ஆனால், நான் மண் சார்ந்த மக்கள் என்று சொன்னால் இவர்களைக் குறிப்பிடுகிறேன் என்று நினைவில் கொள்ளவும்.

இவர்களின் பாரம்பரிய அறிவு கதைகள், சடங்குகள், பாட்டு – இதுபோல் பல்வேறு வடிவங்களில் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிற ஒன்று. இந்த அறிவு என்பது மருந்து அல்லது சிகிச்சை முறைகளாக இருக்கலாம். நெசவு முறைகள், அழகு சாதனங்கள், விதைகள் என்று பல வகைகளில் இது பரிணமிக்கிறது.

பாரம்பரிய அறிவுக்குள் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், தார்மிக மதிப்புகளும் அடங்கும். இது அந்தக் குறிப்பிட்ட சமூகத்தின் தனிப்பட்ட அல்லது ஆன்மிக உணர்வின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.

மஞ்சளின் மகிமையும், வேம்பின் வலிமையும் நமக்குத் தெரியும். இதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இவை வழிபாட்டு முறையுடனும் பிணைக்கப்பட்டன. ஆனால், அதை மேலை நாட்டவர் தமது அறிவுசார் சொத்தாக உரிமைக் கொண்டாடியபோதுதான் நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்குப் புரிந்தது. வேப்பிலையை அடிப்படைப் பொருளாக வைத்து ஒரு மேலை நாட்டு நிறுவனம் ஒரு தாவர பூஞ்சைக் கொல்லியைத் (crop fungicide) தங்கள் கண்டுபிடிப்பு எனச் சொல்லி காப்புரிமையும் பெற்றுவிட்டது.

துடிக்கிறது மீசை… என் பாட்டி கேட்டிருக்க வேண்டும் இதை என்று சொல்லத் தோன்றுகிறது இல்லையா? பிறகு, பல ஆண்டுகள் ஐரோப்பிய மன்றத்தில் நாம் போராடி அந்தக் காப்புரிமை ரத்து செய்யப்பட்டது.

பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம் (Traditional Knowledge Digital Library) அமைக்கும் பணியை நமது அரசு 2001-இல் மேற்கொண்டது. இது மத்திய அறிவியல், தொழில் ஆராய்ச்சி நிறுவனம் (Centre for Scientific and Industrial research) மற்றும் ஆயுஷ் துறை (YUSH – Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy) ஆகியவற்றின் ஒத்துழைப்பினால் உருவானது.

ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் சம்ஸ்கிருதத்திலும், சித்த மருத்துவக் குறிப்புகள் தமிழிலும், யுனானி மருத்துவக் குறிப்புகள் அராபிய, பாரசீக மொழிகளிலும் உள்ளன. இவற்றை சரியாக மொழிபெயர்ப்பது எளிதல்ல.

நமது பாரம்பரிய அறிவு எனும் சொத்தை வேறு நாட்டினர் தமது கண்டுபிடிப்பு என்று சொல்வதைத் தடுக்க இவை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். சுமார் 1,50,000 ஆவணப்பூர்வமான மருத்துவ முறைகள் அதில் உள்ளதாம். அத்துடன், முழுமையான சான்றாதாரங்கள், புகைப்படங்கள், விளக்கக் குறிப்புகள் என்று பிரம்மாண்டமான முயற்சி.

பாரம்பரிய அறிவுக்கு முக்கியமாக இரு வழிகளில் அபாயம் ஏற்படலாம். உயிரி சார்ந்த திருட்டு (bio-piracy), நியாயமற்ற முறையிலான உயிரி சார்ந்த ஆய்வு (inequitable bio-prospecting). இந்த நூலகமும், அதிலுள்ள பதிவுகளும் இந்த அபாயங்களைத் தவிர்க்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பது எப்படி என்பதை மூன்று கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒன்று, அதை ஒரு கலாசார பரம்பரை சொத்தாக. இரண்டு, அது ஒரு பொதுவான மனித உரிமையாக. மூன்று, அதை ஏற்கெனவே உள்ள அல்லது பிரத்யேகமாக இயற்றப்படும் சட்டத்தால் பாதுகாக்கலாம்.

இந்தப் பாதுகாப்பு முறையில் இரண்டு அம்சங்கள் முக்கியம். ஒன்று, அந்த அறிவுக்கு உரிமையாளர்களாக இருக்கும் இனம், சமூகத்தவர்களுக்கு அனைத்து தகவல்களையும் விளக்கியபின், ஒப்புதலைப் பெற்று (prior informed consent)) அந்த அறிவைப் பயன்படுத்தலாம்.

இன்னொன்று, இதை வைத்து செய்யும் ஆராய்ச்சி. அதனால் விளையும் பயனை அவர்களுடன் நியாயமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (equitable benefit sharing). இது போன்ற பாரம்பரிய அறிவு யாரிடம் உள்ளதோ, அந்த மண் சார்ந்த மக்கள் பன்னாட்டு நிறுவனங்களின் வலிமையைத் தாங்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஒரு மருந்துக்குக் காப்புரிமை பெற வேண்டும் என்றால், அது புதிய கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும் novelty and inventive). இந்த அறிவை தங்கள் சொத்தாக ஆக்கிக்கொண்டுவிட்டால் பின் அந்தப் பன்னாட்டு நிறுவனம் வேப்பெண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்று வழக்காட முடியும். அது நமது பாரம்பரிய அறிவு என்று பதிவு செய்துவிட்டோமானால் அந்த அறிவுக் கசிவைத் தடுக்கலாம்.

ஒரு பிரபலமான ஆங்கிலேய நீதிபதி இந்தப் பிரச்னையை ஒரு வழக்கில் மிக அழகாக விளக்குவார் (Merrel Dow Pharmaceuticals vs Norton 1996). சின்சோனா மரப்பட்டைக்கு நோய் தீர்க்கும் சக்தி உள்ளது என்பது அமேசான் இந்தியர்களுக்குத் தெரியும். ஆனால், அதுதான் மலேரியா நிவாரணியான க்வினின் (quinine) என்ற மருந்தின் மூலப்பொருள் என்பது தெரியாது.

பிரெஞ்சு விஞ்ஞானிகள் இவர்களிடம் வந்து மரப்பட்டையில் ஒரு ரசாயனப் பொருள் உள்ளது. அதற்கு சிவப்பு ரத்த அணுக்களுடன் கலந்து ஜுரத்தை குறைக்கும் தன்மை உள்ளது என்பது தெரியுமா என்று கேட்டால் இவர்கள் விடை என்னவாக இருக்கும்? அது தெரியாது.

ஆனால், அந்த மரப்பட்டையில் ஒரு மாயசக்தி இருக்கிறது. அது எங்கள் நோயைத் தீர்த்துவிடும் என்றுதான் இருக்கும். ஆகையால், க்வினின் என்ற பெயர் தெரியாதே தவிர, இவர்களுடைய பாரம்பரிய அறிவுதான் அது என்று ஆங்கிலேய நீதிபதி ஹோஃப்மான் (Lord Hoffman) கூறினார் தனது தீர்ப்பில்.

திருவனந்தபுரம் அருகே கணி என்ற பழங்குடியினருக்கு அரோக்யப்ச்ச என்ற செடியும், அதன் நோய் தீர்க்கும் தன்மையும் தெரியும். திருவனந்தபுரத்தில் வெப்ப மண்டல தாவரவியல் தோட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Tropical Botanical garden and research Institute) உள்ளது.

அந்த நிறுவனத்தினர் கணி பழங்குடியினரின் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்தி ஜீவனி என்ற மருந்தைத் தயார் செய்தார்கள். பிறகு அதை விற்பனைக்குக் கொண்டு வந்த சமயத்தில் அதன் பலனை சரியாகப் பகிர்ந்தார்களா என்பது பற்றி இரு விதமான கருத்துகள் உள்ளன.

மண் சார்ந்த மக்களின் நம்பிக்கைக்கும், நலனுக்கும் விரோதமில்லாமல் செயல்பட்டால் வருங்காலத்தினருக்கு பாரம்பரிய அறிவின் பலன்கள் சென்றடையும். அவர்கள் சந்தேகப்பட்டு வாயை மூடிக்கொண்டுவிட்டால் நஷ்டம் யாருக்கு?

பாரம்பரிய அறிவு நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அது இயற்கை நலனுக்கு ஏற்றதாக இருக்கும். நீராதாரங்களின் வளமை, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வாழ்வது – இது போன்ற பல பொக்கிஷங்கள் அந்த அறிவுக் களஞ்சியத்தில் புதைந்துள்ளன.

அவர்களின் முன்னேற்றத்துக்கும் வழிவகுத்து, அந்த பாரம்பரிய அறிவை அடிப்படையாக வைத்து அவர்கள் உரிமைக்கு விரோதமில்லாமல் புது கண்டுபிடிப்புகள் கொண்டுவந்து, அதனால் பெறும் லாபத்தை சரியாக அவர்களுடன் பகிர்ந்து கொண்டால் நாளை நமதே.

பாரம்பரிய அறிவைப் பற்றி இங்கு நான் சொல்லி இருப்பது கையளவுக்கும் குறைவே.

“வளரும் நாடுகளில் காப்புரிமை மற்றும் வர்த்தக ஏற்றத் தாழ்வுகள்’ (Patent and Trade disparities in developing countries) என்ற நூலின் ஆசிரியர் ஸ்ரீவித்யா ராகவன் கூறுகிறார்: நாடுகளில் ஆக்கிரமிப்பு ஆதிக்க நிகழ்வுகளுக்கு முன்பே இருந்த சமூகங்களுடன் அவர்களுக்கு ஒரு சரித்திர தொடர்ச்சி உள்ளது. அவர்களது அறிவு ஏன் முக்கியமென்றால் அது ஒரு சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் மரபின் அங்கம் என்பதால்தான்.

அந்தத் தொடர்ச்சி நம் தலைமுறையில் அறுந்து போகக் கூடாது. அனைத்தையும் வர்த்தகக் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. பாரம்பரிய அறிவு என்று பார்த்தால் வளரும் நாடுகள்தான் வளமான நாடுகள். அந்த ஏற்றத்தை நாம் நன்கு உணர்ந்து வளம் பெற வேண்டும். என் வைத்தியருடைய மூலிகை அறிவு அழியாமல் இருக்க வேண்டும்.

பிரபா ஸ்ரீதேவன்

Related Posts

error: Content is protected !!