சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு -இன்று தொடக்கம்! –

சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு -இன்று தொடக்கம்! –

தொழில் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் 2 நாட்கள் சர்வ தேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாடு இன்றும் (புதன்கிழமை), நாளையும் நடக்கிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல் வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
tn apps sep 9
இந்த மாநாட்டில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சீரான பிராந்திய வளர்ச்சி, சுற்றுச்சூழலில் நீண்ட கால வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்கு வதற்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்–அமைச்சர் ஜெய லலிதா முன்னிலையில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 1½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

விமான தொழில்நுட்பம், வேளாண், உணவு பதப்படுத்துதல், வாகன பாகங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணு சாதனங்கள், கட்டமைப்பு, கன பொறியியல் துறை, தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன்மேம்பாடு, ஜவுளித்துறை மற்றும் ஆடைகள் உற்பத்தி, மருந்து தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம், ரசாயனம், பெட்ரோலிய ரசாயன பொருட்கள், கனிம துறைகளில் முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது.

மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொள் கின்றனர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே சர்வதேச தொழில் அதிபர்கள் சென்னை நகருக்கு வந்து விட்டனர். இதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இன்று (புதன்கிழமை) காலை மாநாட்டுக்கு வருபவர்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞான தேசிகன் வரவேற்கிறார். அதனைத் தொடர்ந்து, தொழில் அதிபர்கள், பிற நாட்டு முதலீட்டாளர்கள் குழுவின் தலைவர்கள் பேசுகின்றனர். பின்னர், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

அதைத் தொடர்ந்து, காலை 11 மணி அளவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கண்காட்சியினையும், பெரிய தொழில்துறை திட்டங்களையும் தொடங்கிவைத்து பேசுகிறார். அடுத்து, மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழில் துறை) சி.வி.சங்கர் பேசுகிறார். தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை, அங்குள்ள 8 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

மாநாட்டின் 2–வது நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை 8 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் அனைவரையும் வரவேற்கிறார். நிகழ்ச்சியில், தொழில் அதிபர்கள், பிற நாட்டு முதலீட்டாளர்கள் குழுவின் தலைவர்கள் பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசுகிறார். அதன்பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றுகிறார். மாநாட்டு நிறைவில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழில் துறை) சி.வி.சங்கர் நன்றி கூறுகிறார்.

இந்த மாநாட்டில் இரண்டு நாட்களிலும் நடக்க இருக்கும் 25 கருத்தரங்குகளில், இந்திய, வெளிநாட்டு தொழில் அதிபர்கள் உரையாற்றுவார்கள். உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டில் பெரிய மற்றும் சிறிய அளவிலான மொத்தம் 191 நிறுவனங்களின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் தனித்தனி அரங்குகள் உள்ளன.

ஆட்டோமொபைல்–உதிரி பாகங்கள் பிரிவில் அப்பல்லோ, டி.வி.எஸ்., ஜே.கே.டயர், போர்டு இந்தியா, ராயல் என்பீல்ட், எம்.ஆர்.எப். உள்பட 19 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பொறியியல் துறையில் 13 நிறுவனங்களும், வானூர்தித் துறையில் ஏழு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. அந்த வகையில் மொத்தம் 88 நிறுவனங்களின் காட்சி அரங்குகளை இந்த மாநாட்டில் காணலாம்.

மேலும், 103 சிறு–குறு நிறுவனங்களின் காட்சி அரங்குகளும் அங்கு இடம் பெற்றுள்ளன. வேளாண் உணவு, வேதியியல், மருந்து, தகவல் தொழில்நுட்பத்துறை என மொத்தம் 9–க்கும் மேற்பட்ட துறைகளில் இந்த காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு கடன்களை அளிக்கும் 25 வங்கிகளும் அரங்குகளை அமைத்துள்ளன. அந்த வகையில் இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, எச்.டி.எப்.சி., ஆக்ஸிஸ் ஆகிய தனியார் வங்கிகளும் காட்சி அரங்குகளை உருவாக்கி உள்ளன.

மாநாட்டையொட்டி தமிழகத்தின், பழமைவாய்ந்த கலை, கலாசாரம், கைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக சென்னை நகரின் 16 இடங்களில் விசேஷ மேடைகளை தமிழக அரசு அமைத்து இருக்கிறது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை கலைஞர்கள் மாநாடு நடைபெறும் வர்த்தக மைய அரங்கிற்கு வரவழைக்கப்பட்டு இருக்கின்றனர். மாநாட்டுக்கு வரும் தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்க இவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
TN Indus 2
மாநாடு குறித்து தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதிகளில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுவதை விட கூடுதல் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்’’ என்று தெரிவித்தன.

மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கும் முதலீட்டு நிறுவனங்களுக்கு, ஒற்றைச் சாளர அனுமதி, மூலதன மானியம் (ரூ.2 கோடி வரை), 5 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தில் வரிவிலக்கு, நில குத்தகை அல்லது நில விற்பனையின்போது பத்திரபதிவு கட்டணத்தில் 50 சதவீத சலுகை, அதிகநவீன பெரும் திட்டங்களுக்கு 100 சதவீத சலுகை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு ரூ.30 லட்சம் வரை மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் தமிழக அரசால் அளிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

error: Content is protected !!