சிவகங்கையில் பிரமிக்க வைக்கும் ஹெலிகாப்டர் திருமணம்!

சிவகங்கையில் பிரமிக்க வைக்கும் ஹெலிகாப்டர் திருமணம்!

ஆயிரம் காலத்து பயிரான திருமணத்தை ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்துபவர்களும் உண்டு. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் திருமணத்தையே பிரமாண்ட படுத்துபவர்களும் உண்டு. ஆனால், ஆடம்பரமான திருமணங்கள் எல்லாம் ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உட்பட வெளி மாநிலங்களில் பிரபலம். தமிழகத்தில் அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக எப்போதாவது இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன. இந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள திருமணம், அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.
sivagangai marrage
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே எஸ்ஆர் பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் -கண்ணகி தம்பதியர், 40 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சில் குடியேறினர். பிரான்ஸ் நாட்டின் குடிமக்களாக உள்ளனர். பிரான்சில் குடியேறிய ஆறுமுகம் – கண்ணகி தம்பதிக்கு கவுதமன் உட்பட 2 மகன்கள் உள்ளனர். பிரான்சில் பிறந்து வளர்ந்த கவுதமன் சட்டம் படித்தார். இப்போது ஐரோப்பிய கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளர் மற்றும் சட்ட ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.

வெளிநாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் தங்கள் சொந்த ஊரில் மகனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஆறுமுகம், அவரது மனைவி கண்ணகியின் விருப்பம் ஆகும். இதையடுத்து தமிழகத்தில் பெண் தேடும் படலத்தை தொடங்கினர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி பிடிஓ சண்முகநாதன் மகள் பானுப்ரியாவை அவர்களுக்கு பிடித்துப் போனது. தங்கள் பூர்வீக கிராமமான எஸ்.ஆர்.பட்டினத்தில் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக பெண் அழைப்பு, வரவேற்பு, திருமணம் உட்பட அனைத்து விசேஷங்களுக்கும் ஹெலிகாப்டரை பயன்படுத்த கவுதமன் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.

கவுதமன் – பானுப்பிரியா திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை அறந்தாங்கியில் நடக்கிறது. இதற்காக எஸ்ஆர் பட்டினத்தில் இருந்து சற்று முன்னர் பெண் வீடு உள்ள அறந்தாங்கிக்கு ஹெலிகாப்டரில் தன் குடும்பத்தினருடன் புறப்பட்டார் மாப்பிள்ளை கவுதமன். மாலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் போது, ஹெலிகாப்டர் மூலம் 100 கிலோ வாசனை மலர்களை தூவுகின்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் அதே ஹெலிகாப்டரில் மணப்பெண் பானுப்ரியாவை எஸ்ஆர் பட்டினத்துக்கு அழைத்துச் செல்கிறார் மணமகன் கவுதமன்.

நாளை காலை திருமணம் நடைபெறும் போது, மணமக்கள் மீதும், திருமணத்துக்கு வந்திருப்பவர்கள் மீதும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது. திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதி ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் வானில் உலா வருகின்றனர். இதற்காக சென்னையைச் சேர்ந்த ‘கிளைடர் ஏவியேஷன்’ நிறுவனம் மூலம் 15 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை கவுதமன் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக எஸ்ஆர் பட்டினம், அறந்தாங்கியில் சிறப்பு ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை காலை திருமணம் நடைபெற உள்ள கவுதமனின் பண்ணையில், சினிமா ஆர்ட் டைரக்டர்கள் மூலம் பிரமாண்ட அளவில் செயற்கை அரங்கம் அமைக்கப்பட்டு, அரங்கம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற உள்ள திருமணத்தை அறந்தாங்கி மற்றும் எஸ்ஆர் பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்களும், கவுதமனின் உறவினர்களும் ஆச்சரியத்துடன் கண்டுக் கொண்டிருக்கிறார்கள்

தகவல் :http://jannalmedia.com/dpages.php?id=2120

Related Posts

error: Content is protected !!