ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! – ராமதாஸ் கடிதம்

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! – ராமதாஸ் கடிதம்

“தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்டுவதற்கான திசையில் தமிழகம் சரியாக பயணிக்கிறது என்றால் 2014-15 ஆம் நிதியாண்டிற்குள் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 258 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்காவது முதலீடு செய்யப்பட்டிருக்குமா? என்பது ஐயம் தான். வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிப்பது பெரிய சாதனையல்ல. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கான குறைந்தபட்ச முயற்சிகளையாவது அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், அப்படி எந்த முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக வீண் விளம்பரங்களை செய்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. ” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ramadoss 12
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இரண்டாவது பகுதியை சென்னையில் ஆடம்பர விழா நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார். அத்துடன், தமிழ்நாடு தொழில்கொள்கை, ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிபாகங்கள் கொள்கை, உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவற்றையும் வெளியிட்டதுடன் ரூ.5081 கோடி முதலீட்டுக்கான 16 ஒப்பந்தங்களையும் கையெழுத்திடச் செய்துள்ளார்.

தொலைநோக்குத் திட்டத்தின் இரண்டாவது பகுதியில் மின்சாரம், போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட 6 துறைகளில் 217 உட்கட்டமைப்பு திட்டங்களை ரூ.15 லட்சம் கோடியில் செயல்படுத்துவது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் தொழில்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா முயன்றிருக்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில், மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்குவதற்காக நடத்தப்படும் இந்நாடகம் வெற்றி பெறாது.

முதலமைச்சர் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டத்தின் இரு பகுதிகளையும் நான் முழுமையாக படித்தேன்; பொருளாதார வல்லுனர்களிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்தினேன். தொலைநோக்குத் திட்ட அறிக்கை வெறும் வாய்ப்பந்தல் தானே ஒழிய அதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இலக்குகள் பெரிதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை எட்டுவதற்கு சாத்தியமான செயல் திட்டங்களோ, திறனோ இந்த அரசிடம் இல்லை என்பதே உண்மை.

இந்த அரசின் தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்டுவதற்கான திசையில் தமிழகம் சரியாக பயணிக்கிறது என்றால் 2014-15 ஆம் நிதியாண்டிற்குள் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 258 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்காவது முதலீடு செய்யப்பட்டிருக்குமா? என்பது ஐயம் தான். வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிப்பது பெரிய சாதனையல்ல. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கான குறைந்தபட்ச முயற்சிகளையாவது அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், அப்படி எந்த முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக வீண் விளம்பரங்களை செய்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இலக்குகளை எட்ட இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!