உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல்!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல்!

பல தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மொத்தம் 91,975 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த மாவட்டங்களில் கடந்த 9-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

தேர்தலில் போட்டியிட மொத்தம் 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 27 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 2,06,657 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54,747 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32,939 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 992 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று நடை பெற்றது. மனுக்கள் பரிசீலனையை முறையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்தனர். மேலும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் வேட்புமனு பரிசீலனையை கண்காணித்தனர்.

இந்த பரிசீலனையின்போது தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு ஆட்சேபத்துக்குரிய, முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கு அன்றைய தினமே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

error: Content is protected !!