உடுமலை சங்கர் படுகொலை ; 11 பேர் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு

உடுமலை சங்கர் படுகொலை ; 11 பேர் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, எம். மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ்(எ) தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் மற்றும் மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர். இதில் 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கில் கடந்த நவ.14-ம் தேதி விசாரணை முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், டிச. 12-ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்தார். இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜரானர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சங்கர் கொலை வழக்கில், இன்று வழங்கிய தீர்ப்பில் சங்கர் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமி முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெகதீசன்,மணிகண்டன்,செல்வக்குமார்,கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல்,ஸ்டீபன் தன்ராஜ்,அடைகலம் கொடுத்த மற்றொரு மணிகண்டன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, குற்றவாளிகள் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!