இளசுகளையும் அட்டாக் பண்ணும் பக்கவாதம்!

இளசுகளையும் அட்டாக் பண்ணும் பக்கவாதம்!

மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன்
கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப் பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர். மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர்.எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அப்போதெல்லாம் 40ஐக் கடந்தவர்களை தாக்கி வந்த பக்கவாதம், இப்போது 20 வயது இளைஞர்களையும் பாதிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.அதிலும் உலக அளவில் ஆண்டு தோறும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் சுமார் 83,000 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, சிகரெட் போன்றவற்றால்தான் இளைஞர்களை இத்தகைய பக்கவாதம் தாக்குகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
stroke
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் எந்த நிமிடத்திலும் பக்கவாதம் வரலாம். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்து பேச்சு வராமல் போகலாம். கண்பார்வை மறையலாம். கை, கால்கள் இழுத்துக் கொள்ளலாம். வாய் கோணுதல், வார்த்தை குளறுதல், நடக்கும் போது தள்ளாடுதல், தடுமாறுதல், கைகால்கள் தூக்க முடியாமல் உணர்ச்சியற்று போதல் போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். இந்த பாதிப்புக்கள் ஏற்பட்ட நான்கரை மணிநேரத்துக்குள் சிகிச்சை எடுத்துக் கொண்டால், பக்கவாதத்தை குணமாக்க முடியும்.

அதே சமயம் நோய்க்கு ஆரம்பகால அறிகுறி எதுவும் வராது என்பதால், பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சையை துவங்க வேண்டியது அவசியம். ஆரம்பகட்ட சிகிச்சையின் மூலமே உறுப்புகள் செயலிழப்பைத் தடுக்க முடியும்.வயதான காலத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். பிறவியிலேயே இருதய வால்வு பிரச்னை, இருதயக் கோளாறு பிரச்னை இருக்கலாம். அதை கவனிக்காமல் விடும் போது, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இளம்வயதினரை பொறுத்தவரை ஆண்களுக்கு சிகரெட் புகைப்பதால், அதிக ரத்தஅழுத்தத்தால், சர்க்கரை நோயாலும், பெண்களுக்கு கொழுப்பு பிரச்னையாலும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உண்டு.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரில் 20 சதவீதம் பேருக்கு, அதிவேகமாக இருதயம் துடிப்பதால் ஏற்படுகிறது. குறிப்பாக இளையோர்தான் இலக்காகின்றனர். ஆண் களுக்கு உடல்நலம் இல்லையென்றால், உடனடியாக மனைவி அல்லது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கின்றனர். பெண்களுக்கு உடல்நலம் இல்லையென்றால், கண்டுகொள்வதில்லை. இது துரதிருஷ்டவசமானது,

அதேப்போல, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது இந்தியாவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டு களில் மட்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தில் இருந்து 43 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 2030ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
stroke alert 1
பக்கவாதத்திற்கான சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாகும், இதற்கான மருந்துகள் தனியார் மருத்துவ மனைகளில்தான் வந்தது. பக்கவாதம் ஏற்பட்டவுடன் 3 மணி நேரத்துக்குள் ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள ஊசிமருந்தை செலுத்தினால், பக்கவாதத்தை உடனே குணப்படுத்த முடியும். இந்த ஊசி மருந்து ரத்தக்கட்டி அடைப்பை நீக்கும், இதனால் பக்கவாதம் குணமடையும்.இந்த ஊசி மருந்து தற்போது சென்னை ராஜீவ் காந்தி, அரசு பொது மருத்துவமனையில் இலவசமாக போடப்படுகிறது. இதனால் பக்கவாதத்தினால் பாதிக்கப்படும் ஏழைகள் பயன் பெறலாம். பக்கவாதத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யாராயினும் 3 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும். உடனடியாக சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஸ்கேன் செய்யப்படும்போது, ரத்த குழாய் வெடிப்பா, ரத்தக்கட்டி அடிப்பா என்பது தெரிய வந்துவிடும்.

ரத்த குழாய் வெடிப்பு என்றால் குணமாவது கடினம், ரத்த கட்டி அடைப்பு என்றால், 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஊசி மருந்தை செலுத்தி, மூன்று நாள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்து, ரத்த குழாய் அடைப்பு சரியாகிவிட்டதா என்று பார்த்து நோயாளி ஒரு வாரத்துக்குள் குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிடலாம்.

டாக்டர். செந்தில் வசந்த்

error: Content is protected !!