ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு!கடும் கண்டனம் !!

ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு!கடும் கண்டனம் !!

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 23 ல் இருந்து ரூ 28 ஆக உயர்த்தப்படுவதாகவும் எருமைப் பால் கொள்முதல் விலை 31 ல் இருந்து 35 ல் ஆக உயர்த்தப்படுவதாகவும் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளதை .அடுத்து பால் மூலம் தயாரிக்கப்படும் பிற பொருட்களும் விலை உயரும் ஆபத்து இருப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
aavin oct 25
இது குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர். பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர் களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவு சங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்; எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகத்தின் வரலாற்றிலேயே இது வரை எந்தவொரு அரசும் ஒரே நேரத்தில் பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் அளவுக்கு உயர்த்தியதே கிடையாது என பால் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!