ஆவின் பால் பாக்கெட்டுகள்ளே அளவு ஏன் குறையுதுன்னு தெரியுமா?

ஆவின் பால் பாக்கெட்டுகள்ளே அளவு ஏன் குறையுதுன்னு தெரியுமா?

தரம் குறைந்த பாக்கெட்டுகளில் அடைப்பதால் ஆவின் பாக்கெட்டுகளில் பால் கசிவு ஏற்படுகிறது என்றும் பல்வேறு நடவடிக்கைகளைப் பார்க்கும் போது ஆவின் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை மேற் கொள்கிறார்களோ? என்று சந்தேகம் எழுகிறது எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
aavi aug 25
தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று பல்வேறு இடங்களில் வினியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட் டுகளில் பாலின் அளவு மிகவும் குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆவின் பால் பாக்கெட்டுகளில் பாலின் அளவு மிகவும் குறைவாக வினியோகம் செய்யப்படுவது பல ஆண்டுகாலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பாலிதீன் கவர் 40 மைக்ரானுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஆவின் பால் அடைத்து வர பயன்படும் பாலிதீன் கவர் 20 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதினால் பால் பாக்கெட்டில் அடைக்கும்போது சரியான அளவில் அடைக்க முடியாததுடன், கவர் மிகவும் மெலிதாக இருக்கின்ற காரணத்தால் கண்ணுக்கு தெரியாத சிறு, சிறு ஓட்டைகள் ஏற்பட்டு பால் கசிவு ஏற்படுகின்றது.

இதன் காரணமாக பால் பாக்கெட்டுகளில் பாலின் அளவு மிகவும் குறைவான அளவுகளில் வினியோகம் செய்யப் படுகின்றன. இதுதொடர்பாக பல முறை புகார்கள் அளித்தும் தமிழக அரசோ, ஆவின் நிர்வாகமோ இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஒரே விலை கொள்கையை மட்டுமே கடைபிடித்து வருகின்றன. அதே சமயம் பால் முகவர்களுக்கும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் வழங்கி வருகின்றன. ஆனால் ஆவின் நிறுவனம் மும்முனை கொள்கையை கடைபிடிப்பதோடு, பால் முகவர்களுக்கும் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்குவதில்லை.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் சுமார் 1லி கோடி லிட்டர் பாலில் 50 சதவீத தேவையை கூட பூர்த்தி செய்திட தமிழக அரசோ, ஆவின் நிர்வாகமோ இதுவரை முயற்சி செய்யாததை பார்க்கும்போது தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் மறைமுகமாக தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவித்து, ஆவின் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. எங்களது லட்சக்கணக்கான பால் வியாபாரிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு மட்டுமே பால் ஊற்ற தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்”என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!