🦉சர்வதேச நாடக அரங்க நாள்🎪

🦉சர்வதேச நாடக அரங்க நாள்🎪

பாலிவுட், ஹாலிவுட் மற்றும் கோலிவுட் என்றெல்லாம் சொல்லும் இன்றைய சினிமாவின் படையெடுப்புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீர் சிந்தவைக்கும் நாடகம். நல்லதங்காளுக்கு 7 குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டு பாடியபடி கிணற்றில் வீசுவாள் நல்லதங்காள். ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்த போது, நல்லதங்காளாக நடித்த பெண், ஒரு குழந்தையை மட்டும் தாலாட்டு பாடாமல் கிணற்றில் போட்டாளாம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொதித்து விட்டார்கள். எப்படி தாலாட்டு பாடாமல் குழந்தையை கிணற்றில் போடலாம் என்று கேட்டு மேடை ஏறிவிட்டார்கள். கிணற்றில் போட்ட குழந்தையை எடுத்துக் கொடு த்து, தாலாட்டு பாடியபின் போட சொன்னார்களாம்.

இன்னொரு சம்பவம். பாலாமணி அம்மாள், ‘தாரா சசாங்கம்‘ என்ற நாடகத்தை நடத்தினார். இதில் நடித்தவர்கள் பெண்கள் மட்டுமே. இந்த நாடகத்தில், கதாநாயகிக்கு கதாநாயகன் எண்ணெய் தேய்க்கும் காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சியில் நாயகி உடை அணிந்திருக்க மாட்டாள். இதைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். திருச்சியில் இருந்து இந்த நாடகத்துக்காக, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற ரயில் விடப்பட்டதாம். நாயகியாக நடித்தவர் ஸ்கின் உடை அணிந்திருந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது.

1940 வரை புராணம், சமஸ்கிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன. பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார். மேடை நாடகங்களில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இவர். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும், சங்கரதாச சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர். இதில், கிட்டப்பா நடித்து புகழ்பெற்றார். விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்‘ நாடகம் அப்போது புகழ்பெற்ற நாடகம். முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ், மேடையில் உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்துவிட்டது.

சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற நாடக வாத்தியார்கள், ஸ்டூடியோக்களுக்கு தங்களை இடம் மாற்றினார்கள். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. இப்போது நாடகங்கள் முற்றிலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடக கம்பெனிகள் இருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றோர் காமெடி நாடகங்களை நடத்தி வருகின்றனர். இது ஓரளவு வெற்றிகரமாக சென்றாலும் முழுமையான வரவேற்பு இல்லை.

இதனிடையேதான் சர்வதேச அரங்கப் பயிலகம் (International Theater Institute) என்ற அமைப்பு யுனெஸ்கோவுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடக, நாட்டிய வல்லுனர்களால், நிகழ்கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கோடு, 1948-ஆம் ஆண்டு பாரீசில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டச் செயல்பாடாக, 1961-இல் ஃபின்லாந்தின் தேசீய அரங்கவியல் தலைவரும், ஃபின்னிஷ் மொழியின் முன்னணி நாடகாசிரியருமான கார்லோ ஆர்வி கிரிமா என்பவர் உலக அரங்க தினம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நாளில் உலகெங்கும் உள்ள ITI-மையங்களில் நாடகம், நாட்டியம் போன்ற அரங்கவியல் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

1962-ஆம் வருஷம் மார்ச்-27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு வருஷமும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.இதை ஒட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம், மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமீய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காலம் மாறினாலும் கிராமங்களில் திருவிழாக்களில் நாடகம் போட்ட கலைஞர்கள் இன்று வாழ்க்கையையே போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதி இல்லை. நாடகத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞர்கள் இன்னும் கலை தாகத்தோடு இருக்கிறார்கள். அவர்களை ஊக்குவிக்கும் தினமே இந்நாள்.

Related Posts

error: Content is protected !!