வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் அவர் குற்றவாளி! – ஆனால் எம்பி ஆவார்!

வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் அவர் குற்றவாளி! – ஆனால் எம்பி ஆவார்!

இன்னும் சில நாட்களில் மேலவை எம்.பி.யாகப் போகும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், அவர் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வைகோவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ம் ஆண்டு தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது. தண்டனையை இன்றே அறிவிக்குமாறு நீதிமன்றத்தில் வைகோ தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, நீதிபதி தண்டனை விவரங்களையும் உடனடி யாக அறிவித்த நிலையில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு நிறுத்தி வைத்து . வைகோவிற்கு ஜாமின் வழங்கியும் உத்தரவாகி இருக்கிறது. இதனால் திட்டமிட்டப்படி எம் பி ஆவார் என்று தெரிகிறது.

சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு நான் குற்றம் சாட்டுகிறேன் என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக் கூறியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீஸார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசுத் தரப்பில் காவல் ஆய்வாளர் மோகன் உள்பட 9 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்களிடம் வைகோ தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்தார். அரசுத் தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் வைகோவிடம் விசாரணை செய்யப்பட்டது. அந்த விசாரணை யின்போது, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்று பதில் அளித்தார் வைகோ.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இந்த வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜரானார். வைகோ தரப்பில் மூத்த வழக்குரைஞர் தேவதாஸ் ஆஜராகி வாதாடினார். அரசுத் தரப்பு மற்றும் வைகோ தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. . தண்டனைக் காலம் ஒராண்டிற்குக் குறைவாக உள்ளதால், மேல் முறையீடு செய்ய ஏதுவாக அவரது தண்டனை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டு, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,”இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன். நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன். நான் பேசியது தேச துரோகம் அல்ல. நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம், அதில் குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது. எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன். ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன். விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நான் என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன். நாடாளு மன்றத்தில் என் குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை”என்று அவர் தெரிவித்தார்.

Related Posts