விமர்சனம் செய்வதற்கு போதிய தெளிவு இல்லை!.By தமிழ் ஸ்டுடியோ அருண்

தொடர்ச்சியாக பத்திரிகை நண்பர்களும், இன்னபிற தொழில் சார்ந்த நண்பர்களும், திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில், திரைப்படம் சார்ந்த தங்கள் கருத்துகளை எழுதி வருவதை பார்க்கிறேன். பல வருடங்களாகவே திரைப்பட விமர்சனம் மட்டும் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நிலைதான் இருந்து வருகிறது. எல்லா பத்திரிகைகளும், பொருளாதாரம் சார்ந்து எழுதுவதற்கு ஒரு குழு, அரசியல் வல்லுனர்கள் குழு, விளையாட்டுக் குழு என்று பல்வேறு நிபுணர் குழுக்களை வைத்திருக்கிறது. ஆனால் சினிமா விமர்சனம் பற்றி எழுதுவதற்கு மட்டும் இங்கே நிபுணத்துவம் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். சினிமா இங்கே வெறும் பொழுதுபோக்கு என்கிற நிலையிலேயே நின்றுவிட்டது. அது பற்றி யாராவது தங்கள் கருத்துகளை உதிர்த்தால், அதுவே அந்த சினிமாவுக்கான விமர்சனமாக மாறிவிடுகிறது. பொதுமக்களின் இந்த சினிமா சார்ந்த ரசனைக்கு, பத்திரிகைகாரர்களும், இலக்கியவாதிகளும் எழுதிய சினிமா விமர்சனமும் ஒருவகையில் காரணமாக இருக்கிறது.
சினிமாவை எப்படி அணுகவேண்டும், சினிமாவை அதன் காட்சிப் படிமங்களை வைத்து எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை அறிவை கூட இவர்களின் சினிமா விமர்சனங்கள் தொட்டு செல்வதில்லை, மாறாக குறிப்பிட்ட படத்தின் கதையை சொல்லி, அந்த கதாபாத்திரங்களின் உண்மை பெயரை சொல்லி, தங்கள் பொதுப்புத்தி பார்வையை பதிவு செய்கிறார்கள். ரஜினிகாந்த், படத்தை தாங்கி நிற்கிறார். இளையராஜா மீண்டும் தன்னை ராஜா என்று நிரூபித்திருக்கிறார், இன்னாரின் நச் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் என்கிற வரிகளை எல்லாம், காலம்தொட்டு தமிழ் சினிமா விமர்சன மரபில் காணலாம். ஒரு படத்தை பார்ப்பதற்கு மட்டுமல்ல, விமர்சனம் செய்வதற்கும் தமிழ் சமூகத்திற்கு இன்னமும் போதிய தெளிவு ஏற்படவில்லை.
கவிஞர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகைகாரர்களும் சினிமா விமர்சனம் எழுதக் கூடாது என்று சொல்லவில்லை. யார் வேண்டுமேன்றார்லும் எழுதலாம். ஆனால் எழுதுவதற்கு முன், சினிமாவைப் பற்றிய அடிப்படை அறிவாவது பெறுவது முக்கியம். சினிமா என்பதே ஒரு காட்சி ஊடகம், காட்சிகளின் வாயிலாக படத்தை எப்படி மக்களுக்கு உணர்த்துவது, இசை காட்சிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்து எழுதலாம். அல்லது தொடர்ச்சியாக உலகம் முழுவதும் வெளிவரும் படங்களை பார்த்தாவது, தங்கள் திரைப்பட அறிவை வளர்த்துக்கொண்டு, விமர்சனப் போக்கை புரிந்துக்கொண்டு விமர்சனம் எழுதலாம். இன்றும் எல்லா தினசரிகளிலும், வார இதழ்களிலும், மாத இதழ்களிலும், வலைப்பதிவு, முகநூல் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சினிமா விமர்சனங்கள். சமீபத்தில் வெளியான கோச்சடையான் விமர்சனமும் இதற்கு முக்கிய சாட்சி.
ஒரு புத்தகத்தை படிக்காமல், யாரும் அதுப் பற்றி பேசிவிட்டு இலக்கிய உலகை விட்டு நகர்ந்துவிட முடியாது. ஆனால் ஒரு படத்தை பார்க்காமல், இணையத்தில் இருந்து கதையை தெரிந்துக்கொண்டு, அந்த படம் பற்றி பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதும் போக்கு இங்கே மிக அதிகம்.
பத்திரிகைகாரர்களின் சினிமா பற்றிய தெளிவில்லாத வார்த்தைகள், பெரும்பாலான பொதுமக்களை சென்றடைவதால், அவர்களும் அதையே படித்துவிட்டு, சினிமாவை இன்னமும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தவிர, சினிமாவை காட்சிப்பூர்வமாக பார்க்கும் அறிவையே ஒரு முழு சமூகமும் இழந்துக்கொண்டு வருகிறது. மக்கள் இப்படி எழுதினால்தான் படிக்கிறார்கள் என்று மிக சாதாரணமாக இதனை ஒதுக்கிவிட முடியும். ஆனால் ஆரம்பம் முதலே, உருப்படியான சினிமா விமர்சனமும், நல்ல காத்திரமான கருத்துகளும் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் இன்று இந்த நிலை இருந்திருக்காது. ஆரம்பம் முதலே மேட்டுக்குடிகளுக்கு சினிமாவின் மீதிருந்த வஞ்சகத் தன்மையே இன்று எல்லாத் துறைகளிலும் சினிமா சீரழிந்ததற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
தொடரும்…
தமிழ் ஸ்டுடியோ அருண்