வங்கி கணக்கு துவக்க ஒரு முகவரி சான்று போதும் – விதிகளை எளிமையாக்கியது ஆர்பிஐ

வங்கி கணக்கு துவக்க ஒரு முகவரி சான்று போதும் – விதிகளை எளிமையாக்கியது ஆர்பிஐ

வங்கிகளில் கணக்கு துவக்க பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. வங்கிகளுக்கு வங்கி இது வேறுபடும் என்றாலும், சொந்த ஊரை விட்டு பிழைப்புக்காக வெளியூர்களில் வசிப்பவர்கள் சரியான முகவரிச்சான்று இல்லாததால் வங்கி கணக்கு துவக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் என்ற விதிமுறைகளை ரிசர்வ் வங்கி எளிமைப்படுத்தி உள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கிகளில் கணக்கு துவக்குவதற்கு தற்காலிக முகவரி அல்லது நிரந்தர முகவரி இவற்றில் ஏதேனும் ஒன்று சமர்ப்பித்தால் போதும். ஒரு வேளை முகவரி சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள வசிப்பிடம் மாறும் பட்சத்தில், ஆறு மாதத்துக்குள் புதிய முகவரிச் சான்றை 6 மாதத்துக்குள் வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI--
வெளியூர்களில் வசிப்பவர்கள் வங்கி கணக்கு துவக்குவதில் உள்ள இடர்பாடுகள் மற்றும் முகவரி சான்று சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி விதிகளை எளிமையாக்கியுள்ளது. எனவே, உள்ளூர் முகவரி சான்று இல்லாவிட்டாலும் வங்கிகள் சேவை அளிக்கலாம்.தகவல் தொடர்புக்காக வாடிக்கையாளர் அளிக்கும் உள்ளூர் முகவரி சரியானதுதானா என்பதை வங்கிகள் அனுப்பும் கடிதத்துக்கு பெறப்பட்ட ஒப்புதல் சீட்டு, மற்றும் ஏடிஎம், செக் புத்தகம் போன்றவற்றை அந்த முகவரிக்கு அனுப்பும்போது அவர்கள் பயன்படுத்துவதை வைத்து உறுதி செய்து கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்ப வங்கிகள் தங்கள் கேஒய்சி விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுறவுக்காக கொரியாவுடன் ரிசர்வ் வங்கி நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

error: Content is protected !!