வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!
வடகிழக்குப் பருவமழைக் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வங்கக் கடலில் அடிக்கடி புயல் சின்னங்களும், புயல்களும் உருவாகி வருகின்றன. இதனால் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பசை உறிஞ்சப்பட்டு, தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு குறைந்துள்ளது.இந்நிலையில் வங்கக் கடலில் தமிழகம் மற்றும் இலங்கை கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை (நவம்பர் 30) உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ,”இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங் களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கழுகுமலையில் 4 சென்டி மீட்டரும், வால்பாறையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.”சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்