லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்!

லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்!

ணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது செய்தியாகி இருக்கிறது. பக்தர்கள் யானைக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். இன்னும் சில மாதங்களில் அந்தக் கோயிலுக்கு இன்னொரு யானையை கொண்டு வந்து விடுவார்கள் என்று கணிக்கிறேன். அதற்கும் ‘சித்ரா’ அல்லது ‘ரேவதி’ என்று பெயர் வைத்து தும்பிக்கையை மக்கள் தலை மீது வைத்து ஆசீர்வாதம் வழங்க பயிற்சி அளித்து விடுவார்கள். அப்புறம் தெருத்தெருவாக போய் பிச்சை எடுக்கவும் வைக்கலாம்.

கோயில் யானை சிஸ்டம் பண்டைய நூற்றாண்டின் எச்சங்களில் ஒன்று. விலங்குகள் பற்றியும் அவற்றின் தேவைகள், உணர்வு நிலைகள், உணவுப் பழக்கங்கள் குறித்த பெரிய அறிவு எதுவும் இருந்திராத சமூகங்கள் உருவாக்கிய முறைமை. பூம்பூம் மாடு தலையாட்டினால் நமது வீட்டில் நல்லது நடக்கும், நாக பஞ்சமி அன்று பாம்பு பால் குடித்தால் புண்ணியம், கோயில் பசுவின் கோமியம் குடித்தால் பாவங்கள் தீரும் என்றெல்லாம் விலங்குகளை சுற்றி நமது வாழ்வியலை கட்டமைக்க முக்கிய காரணம் விலங்குகளில் தெய்வத்தன்மையை காணும் animism எனும் பண்டைய சிந்தனாவாதம்தான்.

அதுவுமின்றி அப்போதைய காலகட்டத்தில் மனித சக்திகளின் எல்லைகளுக்கு மீறி வாய்ப்புகளை உருவாக்கியவை விலங்குகள்தான். பழம் சமூகங்களின் தொழில்நுட்பங்கள் என்றால் அவை பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள்தான். போக்குவரத்துக்கு, தகவல் தொடர்புக்கு, போர்களுக்கு, விவசாயத்துக்கு, பொழுது போக்குக்கு என்று பலவற்றுக்கு வகைகளில் கருவிகளாக அவை உதவிக் கொண்டிருந்திருக்கின்றன. அதே வரிசையில் தெய்வங்களாகவும் போற்றப்பட்டுள்ளன.

நவீன உலகில் இவை எதற்குமே விலங்குகளை நாம் பயன்படுத்துவதில்லை. உலகில் எந்த ராணுவத்துக்கும் யானைப்படை, குதிரைப்படை தேவையில்லை. புறா காலில் ஓலை கட்டி அனுப்புவதில்லை, நிலத்தை உழுவதற்கு கருவிகள் உள்ளன. பொழுதுபோக்குக்கு கணக்கற்ற ஆப்ஷன்கள் இருக்கின்றன. இவற்றில் எல்லாம் உடனடியாக மாறுதல்களை ஏற்றுக் கொள்ள முடிந்த நம்மால் இந்த தெய்வத்தன்மை மேட்டரில் மட்டும் மாற முடியவில்லை. கோயில் பசு, கோயில் யானை, நாக பஞ்சமி பாம்பு என்று இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறோம். கோயில் யானைகள் பெரும்பாலும் சத்துக் குறைபாடால் பாதிக்கப்படுகின்றன. பாகன்களால் துன்பங்களுக்கு ஆளாகின்றன, வனத்துறை பாதுகாப்பில் உள்ள யானைகளை விடப் பாதி அளவு உணவுதான் அவற்றுக்கு கிடைக்கின்றது. அதுவும் தரமான உணவில்லாமல் மனிதர்கள் உட்கொள்ளும் சமைத்த உணவுகளை கொடுப்பதால் உடற்கூறு பிரச்சினைகள் உண்டாகின்றன.

மேலும் அவை முக்கால்வாசி நேரம் கோயிலுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பதால் தங்கள் இயல்பான வாழ்வை வாழ இயலாமல் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றன. யானை ஒரு social animal – அதாவது சக யானைகளுடன் இணைந்து வாழ்வதில் விருப்பம் உள்ளது. அதைக் கோயில்களில் தனிமையில் வைப்பது என்பது ஏறக்குறைய ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் வைப்பதற்கு சமம். .!

ஆதலால் லட்சுமியின் சாவுக்கு நாம் வருந்துவதில் அர்த்தமில்லை. அவளது வாழ்வுக்குத்தான் வருந்த வேண்டும். கோயில் யானைகள் என்ற சிஸ்டம் விலங்குகள் நலம் குறித்த அறிவும் அக்கறையும் இல்லாத பழங்குடிகளுக்குப் பொருந்தலாம். விலங்குகள் குறித்த அறிவியல் பூர்வமான தெளிவு பெருமளவு இருக்கும் இன்றைய சமூகத்துக்குப் பொருந்தாத ஒன்று. இப்போது இந்தியக் கோயில்களில் ஏற்கனவே இருக்கும் யானைகளை ஏதாவது செய்து காப்பாற்ற இயலுமா என்று தெரியாது. ஆனால் புதிதாக யானைகளைக் கொண்டு வருவது நிறுத்தப்பட வேண்டும். லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்.

உங்களுக்கு யானைகளின் தெய்வத்தன்மை மீது நம்பிக்கை இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. பல கோயில்களில் பல சைஸ்களில் யானைச் சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொட்டு வணங்கிக் கொள்ளுங்கள். சிவனோ, பெருமாளோ உயிரோடு நேரே வந்தால்தான் வணங்குவேன் என்று யாரும் சொல்வதில்லையே. அவர்களின் சிலைகளை வைத்துதானே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்? அதையே யானைக்கும், மாட்டுக்கும் செய்து கொள்ளலாமே? உங்களின் ஆன்மீகமும் தழைக்கும், விலங்குகளும் சித்ரவதைகளில் இருந்து தப்பிக்கும்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!