June 2, 2023

லஞ்சம் வாங்குவதில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் தமிழ்நாடு!

அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் ‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. இப்போது கூட அரசு அலுவல கங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவது அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 52 சதவீதமாக இருந்த லஞ்சத்தின் அளவு, நடப்பு ஆண்டில் 62 சதவீதமாக அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளதுதான் ஹைலைட்.

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகளுக்கு, மக்கள் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக டிராஸ்பாரன்சி இன்டர்நேஷனல் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மக்களின் அளித்த லஞ்சத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அரசு அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், பீகார்-2, உ.பி.,-3, தெலுங்கானா – 4, கர்நாடகா – 5, தமிழகம் – 6, ஜார்கண்ட் – 7, பஞ்சாப் – 8 ஆகிய இடங்களில் உள்ளன. இதே போன்று லஞ்சம் குறைவாக உள்ள மாநிலங்களில் டெல்லி முதலிடத்திலும், அரியானா 2வது இடத்திலும், குஜராத் 3 வது இடத்திலும், மேற்குவங்கம் 4வது இடத்திலும், கேரளா 5வது இடத்திலும், கோவா 6வது இடத்திலும், ஒடிசா 7 வது இடத்திலும் உள்ளன.

சொத்து மற்றும் நில பட்டா மாற்றுவது தொடர்பான விவகாரங்களுக்காக அதிகம் லஞ்சம் வாங்கப் படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில் 41 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது. லஞ்சம் அதிகம் பெறப்படும் துறைகளில் மாநகராட்சி 2வது இடத்தில் (19 %) உள்ளது. 3வது இடத்தில் காவல் துறை உள்ளது. இந்த ஆய்விற்கு உட் படுத்தப்பட்ட 62 சதவீதம் பேரில் 35 சதவீதத்தினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை லஞ்சம் அளித்தவர்கள். 27 சதவீதம் பேர் ஒருமுறை அல்லது 2 முறை லஞ்சம் கொடுத்தவர்கள்.