ராட்வீலர் மாதிரி கொடூர நாயினங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கலாம்

ராட்வீலர் மாதிரி கொடூர நாயினங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கலாம்

ளர்ப்பு நாய்களைப் பற்றி நிறைய கற்பிதங்கள் அல்லது போலிநம்பிக்கைகள் உண்டு. அந்த நாய்கள் சுத்தமாக இருக்கும். தடுப்பூசி போட்டிருப்பார்கள். அந்த நாய்கள் மனிதர்களை கடிக்காது. அது கத்த மட்டும்தான் செய்யும். அவை பேன்ட் ஷர்ட் ஷூ டை அணியவில்லையே தவிர மிகவும் நாகரிகமானவை. ஆங்கிலத்தில்தான் குரைக்கும். அவை மிகவும் அன்பானவை. புது ஆட்களிடம் கூட அன்போடு பாசமாக வாலாட்டி நடந்துகொள்ளும். கண்ட இடங்களில் வாயை வைக்காது. டாமி சூச்சூ போ என்றால் சொன்ன இடத்தில் மட்டும்தான் போகும். உக்காரு என்றால் உக்காரும் நில்லு என்றால் நிற்கும். வா படுத்துக்கோ என்றால் பக்கத்திலேயே கட்டிக்கொண்டு படுத்துக்கொள்ளும். அன்பு காட்டுவதில் புதிதாக கிடைத்த பாய்பிரண்டைவிட அவை சிறப்பானவை என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! எல்லாமே கற்பிதங்கள். நாயோனர்கள் பரப்பிவிட்டவை.

நிஜத்தில் எல்லா வளர்ப்பு நாய்களும் அவ்வளவு மகாத்மாக்களோ ஓனர் பேச்சைக்கேட்டு நடக்கிற விசுவாசிகளோ அல்ல. பல வீடுகளில் நாய்கள்தான் ஓனர்களை வளர்ப்பதை பார்த்திருக்கிறேன். வாயை கொண்டு போய் கக்கூஸில் வைத்துவிட்டு நேராக ஓனர் சாப்பிடும் தட்டில் வந்து வாய் வைத்து சாப்பிடும். நம் தட்டு பக்கத்தில் இருந்தால் அதிலும் வாய்வைக்க பாயும்! அந்த கக்கூஸ் வாயோடு வந்து முத்தமிடும்ங்கள்! நாவால் முகத்தை போட்டு நக்கி எடுக்கும். கண்ட இடத்தில் அலைந்துவிட்டு வந்து மனிதன் போல மேலே ஏறி கட்டிபிடித்து உருளும்ங்கள். நெஞ்சில் காலைவைத்து முகத்தை நக்கும்! அதையெல்லாம் பெருமையாக நம்ம டேஷ் டேஷ் இருக்கானே அவனுக்கு நான்னா உசுரு என் தட்டுலதான் சாப்புடுவான், எங்கூடதான் தூங்குவான் என அலட்டிக்கொள்வார்கள். அதெல்லாம் இந்த நாயோனர்களின் பர்சனல் சமாச்சாரங்கள் அவர்கள் அந்த நாயை காதலிக்கலாம், கட்டிபிடிக்கலாம், முத்தம் கூட கொடுக்கலாம். டேட்டிங் போகலாம் அவர்கள் பிரச்சனை.

ஆனால் சென்னையில் அடுத்தடுத்து இரண்டு வளர்ப்பு நாய்கள் குழந்தைகளை கடித்திருக்கின்றன. அதுவும் மிகக்கொடூரமாக! அக்காட்சிகளை பார்க்கும் திராணிகூட இல்லை. குழந்தைகளை தைரியமாக சாலைகளில் விளையாட விடக்கூட அச்சம் வருகிறது! எந்த நாயின் நாய் வந்து கடிக்குமோ என கிலியாகவிருக்கிறது! இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட அதிக பட்சம் கடித்தாலும் அதிக சதையை பிய்தெடுக்காத பொமரேனியன் மாதிரி குட்டி சைஸ் நாய்களைதான் வளர்த்துக்கொண்டிருந்தார்கள். அது க்ரீச் க்ரீச் என்று கத்தும். அதிகபட்சம் துரத்தும். கட்டிதான் வைத்திருப்பார்கள்.

பெரிய பெரிய பண்ணைகள்தான் முதலாளிகள்தான் ஆளுயர நாய்களை வளர்த்தார்கள். பணத்துக்கு பாதுகாப்பு செக்யூரிட்டி காரணங்கள். அவர்களுக்கு பெரிய பண்ணைவீடு நிலம் இருக்கும், இந்த காட்டெருமைகுட்டிபோலிருக்கும் நாய்கள் அங்கே சுற்றித்திரியும் கக்கா சுச்சாபோகும் யாரையாவது கடிக்கவேண்டும் ஆன ஆசையாக இருந்தால் எலும்பு கறி போடுவார்கள் கடித்து விளையாடும். ஆனால் இன்று சென்னை மாதிரி ஜனநெருக்கடி மிகுந்த நகரத்தில் அபார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் எதற்காக அத்தாம் பெரிய பெரிய ராட்வீலர், சைபீரியல் ரக நாய்களை அதுவும் பாதுகாப்புக்கும் ராணுவத்துக்கும் வேட்டைக்கும் பயன்படுகிற கொடூரமான நாயினங்களை வளர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த நாய்களின் முகத்தை கவனித்துப் பாருங்கள் அவை எப்போதும் கோபமாகவே இருப்பதைப் பார்க்கலாம். முகம் சிடுசிடுவென்றே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இந்நாய்களில் பலவும் குளிர்பிரதேசங்களில் வாழ்ந்து பழக்கப்பட்டவை. அதைக் கொண்டுவந்து பைப்பை திறந்தால் தண்ணிக்கு பதிலாக எரிமலை குழம்பு வருகிற ஊருக்குள் விட்டால் என்னாகும்! அதென்ன ஆடுஜீவிதம் ஹீரோ மாதிரி பெரியோனே ரகுமானே என பாடி ஃபீலிங்கா பண்ணும்! வெறியேறித்தான் இருக்கும். அதை ஓனரிடம் காட்டமுடியாது. சோறு கிடைக்காது. வேறு யாரிடம் காட்டமுடியும். இளிச்சவாயன்கள் நாம்தான் இருக்கோமே!இந்த வெறிநாய்களை பார்க்கிற்கும் நடைபாதையிலும் அழைத்துக்கொண்டு சுற்றுவார்கள். அது போகிற வருகிற நாய்களிடம் எல்லாம் சண்டைக்கு போகும். ஒல்லியாக யாராவது ரன்னிங் ப்ராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்தால் கடிக்கப் பாயும். குறிப்பாக குழந்தைகளை பார்த்தாலே நாய்களுக்கு ஏன்தான் அவ்வளவு கோபம் வருமோ! ஆடம்பரக் கார்களில் தலையை மட்டும் வெளியே விட்டுக்கொண்டு பயணிக்கும்! வெளியே பைக்கில் நிற்கும் நம்மை பார்த்து குரைத்து பயமுறுத்தும்.

இந்த வளர்ப்பு நாய்களுக்கென்று நம்மூரில் எந்த விதிமுறைகளும் கிடையாது. அது எங்கும் சுற்றும் எங்கும் யார் வீட்டுமுன்னும் பேண்டுவைக்கும். அதை ஓனர்கள் அகற்றக்கூட மாட்டார்கள். அவர்கள் தங்கள் செல்லங்களை வெளியே அழைத்துவருவதே அதற்குத்தானே! எழுத்தாளர் சாருநிவேதிதா மட்டும்தான் இந்தியாவிலேயே அதை சுத்தம் பண்ணுகிற ஒரே நாயோனர்! இப்படிப்பட்ட வளர்ப்பு நாய்களை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்னின்ன நாயினங்கள்தான் வளர்க்கவேண்டும் என்று உத்தரவிடலாம். ராட்வீலர் மாதிரி கொடூர நாயினங்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்கலாம். தடையை மீறி வளர்ப்பவர்களுக்கு தண்டனை வழங்கலாம்! இல்லாது போனால் இந்த நாய்கள் நம் குழந்தைகளையும் விட்டுவைக்காது!

அதிஷா

error: Content is protected !!