மோடி அரசின் புத்தாண்டு பட்ஜெட் – முழு விபரம்!

மோடி அரசின் புத்தாண்டு பட்ஜெட் – முழு விபரம்!

விரைவில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக இவர்கள் எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிர்மலா சீதாராமன், அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டு வந்தனர்.

இதை அடுத்து மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் முதன்முறையாக தாக்கல் செய்த காகிதம் இல்லா பட்ஜெட், டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்பட்டது. இதன் காரணமாக ரூ.140 கோடி மிச்சமானது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உரையின் சாராம்சம்:

‘‘கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு பொருளாதார பின்னடைவு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

கொரோனா பரவல் ஏற்பட்ட மோசமான காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கடந்த ஆண்டு நான் தாக்கல் செய்தபோது இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பொதுமுடக்கத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால், கொரோனா பெருந்தொற்றினால் இந்தியா பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கும். இந்திய மக்கள் கொரோனா பயத்திலிருந்து விரைந்து வெளியில் வர வேண்டும் என்பதற்காக தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியா இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுத் தானியங்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

சுகாதார கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு சுகாதார திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.64180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளது. விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 1.72 லட்சம் கோடி மதிப்பிற்கு விவசாய பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.

அரசின் தானிய கொள்முதல் மூலம் ஒராண்டில் கூடுதலாக ஒன்றரை கோடி விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். நடப்பாண்டு, நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெல் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு ரூ.72,752 கோடியும், கோதுமை விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கு ரூ.75,060 கோடியும், பருத்தி விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கு ரூ.27,975 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:

* கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

* கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு அதாவது சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

* இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு தற்போது உள்ள நிலையும், சமூக பொருளாதார மறு உருவாக்கம் தேவைப்படக்கூடிய அளவில் உள்ளது.

* உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக ஒரு மில்லியனுக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கொரோனா காலத்தில் உயிரிழப்பு இருந்தது.

* ஆஸ்திரேலியாவில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் பெற்றுள்ள வெற்றி நாட்டின் இளைய சமுதாயத்திற்கு உத்வேகத்தையும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

* உலகளாவிய பெருந்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

* தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது. தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும்.

* நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.

* காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.

* ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம்.

* வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* ரெயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு.

* இந்திய தேசிய ரெயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

* அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்.

* சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 1,18,101 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம். இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும்.

* நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.

* 139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

* முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

* வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

* காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

* நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது.

* நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்து கொள்ளவும், குறைகளைத் தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

* இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன.

* எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.

* மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்.

* அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும்.

* பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.

* அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

* கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.

* அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

* 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

* லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.

* மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.

* அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

* தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு.

* இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.

* 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.

* ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும். * நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

* வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

* 2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம்.

* வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம்.

* நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம்.

* 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பட்ஜெட் உரையின் போது தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்தார். மதுரை-கொல்லம் சாலை மற்றும் சித்தூர்-தாட்சூர் சாலை ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். சென்னையில் ரூ. 63 ஆயிரம் கோடியில் மெட்ரோ 2-வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும்.

கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் பெட்டுகாட் ஆகிய 5 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருவாக்கப்படும். கன்னியாகுமரி நடைபாதையின் 600 கி.மீ உள்பட ரூ .65,000 கோடி முதலீட்டில் கேரள மாநிலத்தில் 1100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மேற்கு வங்க மாநிலத்தில் ரூ .25,000 கோடி செலவில் கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்படுத்துதல் உட்பட 6700 கி.மீ நெடுஞ்சாலை பணிகள் செயல்படுத்தப்படும் என்று தெரிவி்ததார்.

மேலும் அசாம் மாநிலத்தில் தற்போது ரூ .19000 கோடியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சமா நிலத்தில் 1300 கி.மீ-க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய ரூ .34,000 கோடி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!