மோசடி நிறுவன விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடமும் விசாரணை! – போலீஸ் வார்னிங்
ஈமு கோழி, நாட்டுக்கோழி போன்ற நிறுவனங்களின் விளம்பர காட்சிகளில் சினிமா நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இதை பார்த்தும் பலர் பணத்தை அந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர்.இதையடுத்து மோசடி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் கூடுதல் டிஜிபி பிரதீப் பிலிப் எச்சரித்துள்ளார்.
தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் டிஜிபி பிரதீப் பிலிப் கோவையில் நேற்று அளித்த பேட்டியின் போது,” தமிழகத்தில் பொருளாதார குற்றங்களை தடுக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஈமுகோழி, நாட்டுக்கோழி போன்ற மோசடி தொடர்பாக இதுவரை 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23,676 முதலீட்டாளர்கள் ரூ.485 கோடி பணத்தை அளித்து ஏமாந்ததாக ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனங்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். 75 வழக்குகளில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈமு கோழி, நாட்டுக்கோழி போன்ற நிறுவனங்களின் விளம்பர காட்சிகளில் சினிமா நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இதை பார்த்தும் பலர் பணத்தை அந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். இதுபோன்ற நிறுவனங்களிடம் சினிமா நடிகர், நடிகைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசடி நிறுவனங்களுக்கு சாதகமாக நடிக்கும் சினிமா நடிகர், நடிகைகளிடமும் தேவைப்பட்டால் மோசடி குறித்து விசாரிக்கப்படும். நடிகர், நடிகைகள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற மோசடி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.