மொழிகளின் பெருமை குறித்த சர்ர்சை – கொஞ்சம் அலசல்!

கன்னடம் பேச்சளவில் தமிழோடு இணைந்த மொழிதான், வேர்ச்சொல் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது, சரி. ஆனால், கன்னட எழுத்துருக்களையும், தமிழ் எழுத்துருக்களையும் நம்மால் துளியளவு கூடப் பொருத்திப் பார்க்க இயலாது. மனிதர்களுக்கு எப்போதும் ஒரு இயல்பு உண்டு, தன்னோடு தொடர்புடைய எல்லாம் உயர்ந்தது, தனது மொழி சிறந்தது, தனது இனமே உயர்ந்தது, அந்த இயல்புணர்வு ஒரு தகவமைப்பு, தன்னையும், தனது குழுக்களையும் பாதுகாக்க அத்தகைய இயல்புணர்வே கருவி.எதிர்ப்புணர்வையும், பாதுகாப்பையும் அது வழங்கக்கூடியது. அது பொதுவாக வேட்டைக்குடிகளாக இருந்த நமது மூதாதையருக்குப் பொருத்தமானதாக இருந்திருக்கலாம், நவீன மனிதர்களுக்கு அல்ல. மனமும், உடலும் வளர்ச்சி அடையக்கூடிய நிலையில், முதிர்ச்சி அடைவதும் உண்மைகளை ஒப்புக் கொள்ளும் பக்குவம் அடைவதும் மிக முக்கியமானது.
மொழிகளின் பெருமையைப் பேசும்போது, நாம் அவற்றின் வேர் தேடி, பயணிக்க வேண்டியவர்களாகிறோம். கன்னடமும், தமிழும், திராவிட மொழிக்குடும்ப மரபின் கிளைகளாக, ஒரே மண்ணில் வேரூன்றி, வெவ்வேறு திசைகளில் வானம் தொட முயல்கின்றன. மொழியின் அழகு அதன் தனித்துவத்தில் மட்டுமல்ல, அது மனிதர்களை இணைக்கும் பாலமாக மாறும் தருணங்களிலும் உள்ளது. ஒருவர் தனது மொழியை உயர்த்திப் பேசுவது இயல்பு தான், ஆனால், அந்த உயர்வு மற்ற மொழிகளைத் தாழ்த்துவதாக மாறும்போது, அது புரிதலின் ஒளியை மறைத்துவிடுகிறது.தமிழ் ஒரு குறிப்பிட்ட மூல வரிவடிவ மொழியில் (மொழியைத் தவிர்த்து விட்டு, வடிவத்தில் என்று கூட வைத்துக் கொள்ளலாம்) இருந்து வளர்ச்சியுற்றது என்று தரவுகளோடு ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள், அதற்கு அறிவியல்பூர்வமாக அவர்கள் புரோட்டோ – திராவிட மொழிக்குடும்பம் என்று பெயர் சூட்டுகிறார்கள்.
இதற்குள் நமது அறிஞர் பெருமக்கள் பலருக்கு இருக்கும் மனத்தடை என்னவென்றால் “திராவிடம்” என்கிற சொல்லாடல், ஏனெனில் அது பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற மக்கள் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. திராவிட ஒவ்வாமை நோயால் அவதியுறும் சிலருக்கு இந்த புரோட்டோ – திராவிட மொழி ஒவ்வாமை இருக்கலாம், அது நமக்குப் புதியதல்ல. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் பிழைப்புவாதம் செய்யும் திடீர் புரட்சியாளர்கள் பலருக்கு இந்த நோய் முற்றிய நிலையில் இருப்பதால், அவர்களைக் குறித்து கரிசனம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.ஆனால், மூக்கு விடைத்த “ஆழ்ந்த பேரறிவு” கொண்ட சிலர் வறட்டுப் பிடிவாதமாக “இதோ பார் தமிழை, அதோ பார் கன்னடத்தை, கன்னடத்தில் பார் எதுவுமே இல்லை, என்னைப் பார்த்துத்தான் அவன் காப்பியடித்தான்” என்று பிற மொழிகளை விமர்சிப்பது தனிப்பட்ட காழ்ப்புணர்வின் வழியாக வெளியாகும் வன்மம் தவிர வேறென்னவாக இருக்கும்?
மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார், “எந்த மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் உண்மையான உயர்வு தன்னைத் தாழ்த்திக் கொள்வதில் உள்ளது.” இந்தப் புரிதல், மொழியோ, இனமோ, தனிமனிதப் பெருமையோ எதுவாக இருந்தாலும், உண்மையின் முன் நாம் அனைவரும் ஒரு பயணி மட்டுமே என்பதை நினைவூட்டுகிறது.முதிர்ச்சி என்பது, தன்னை உயர்த்துவதற்காக மற்றவர்களைக் குறை கூறுவதைத் தாண்டி, எல்லாவற்றிலும் உள்ள நன்மையைப் பார்க்கும் பக்குவத்தில் உள்ளது. மொழிகளைக் கொண்டாடுவோம், ஆனால் அவை நம்மைப் பிரிக்காமல், இணைக்கும் கருவிகளாக மாறட்டும்.
தமிழ் – ஒரு முந்தைய வரி வடிவ மொழியில் இருந்து கிளைத்துப் பிரிந்த மொழி, அந்த மூல வரிவடிவத்தை புரோட்டோ – திராவிட மொழிக்குடும்பத்தின் மூல மொழி என்கிறார்கள், அதற்கான 4500 ஆண்டுகாலத் தரவுகளை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள், அந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் நமக்கு நேர்மையில்லை, “அதெல்லாம் கிடையாது, தமிழ் தான் எல்லாவற்றுக்கும் மூலம்”, “ஐராவதம் மஹாதேவன் ஒரு தேவிடியா மகன்”, “நீ ஒரு கன்னடன்”, “ஆப்ரிக்காவின் கடற்கரையில் அம்மா இங்கே வா வா என்று குழந்தைகள் பாட்டுப் பாடுகிறார்கள்”, என்று நம்மை இனவாதிகளாக அடையாளம் கண்டு கொள்வதில் தமிழர்க்கு ஈடு இணை இல்லை.இந்த விவாதத்தில் பங்கேற்கிற சில தமிழ் அறிஞர்கள்? எந்த இலக்கும் இல்லாமல், கன்னடத்தில் உள்ள சொற்களை எழுதுவது, அதற்கு இணையான தமிழ் சொற்களை எழுதுவது,
“பார்த்தீர்களா தமிழ் தான் உயர்ந்தது” என்று தங்கள் முதுகையே தட்டிக் கொள்வது, பிறரையும் தனது முதுகில் தட்டுமாறு வேண்டுவது என்று சலசலக்கிறார்கள்.இப்போது விவாதம், தமிழ் – புரோட்டோ – திராவிட மொழிக்குடும்பத்தின் மூல மொழி வரிவடிவத்தில் இருந்து கிளைத்து வளர்ந்ததா இல்லையா என்பதுதான்?.இல்லை என்றால், அதற்கான தரவுகள் என்ன? அறிஞர்கள் சொல்கிற அந்த வரிவடிவ மூலத்தைத் தாண்டி தமிழ் வரிவடிவம் அல்லது தமிழ்-பிராமி வரிவடிவம் எப்படி புரோட்டோ – திராவிட மொழியியல் கருத்தை உடைக்கிறது? என்று விவாதிக்க வேண்டும், அதை விடுத்து, “தோ பார் கண்ணா தமிழ் மேஜிக்” என்று குரளி வித்தை காட்டுவது எந்த வகையிலும் பயனளிக்காது.”எளிய உண்மைகளை ஒப்புக்கொள்ள உங்களுக்கு ஆழ்ந்த பேரறிவெல்லாம் தேவையில்லை, மாறாக சக மனிதர்கள் மீதான துளி அன்பும், அவர்களின் நம்பிக்கையின் மீதான கரிசனமும் போதுமானது”.