மைனா , கும்கி, கயல் அடுத்து சிங்கத்தை வைத்து ஒரு புதிய முயற்சி ! – பிரபு சாலமன் நேர்காணல்

“கயல்” படத்தின் இறுதிகட்ட பணியில் பிஸியாக இருந்தார் பிரபு சாலமன் அவரை சந்தித்து பேசினோம்..
·
கும்கி வெளியாகி பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டதே! இவ்வளவு பெரிய இடைவெளி தேவையா?
நல்ல தரமான படைப்பு வர வேண்டுமானால் இடைவெளி தேவைதான்.மைனா வெற்றிக்கு பிறகு கும்கிக்கு ஒரு இடைவெளி இருந்தது.அதற்க்கு காரணமே அடுத்து என்ன மாதிரியான கதையை தேர்ந்தெடுப்பது? என்கிற யோசனையில் சில காலம்.மைனாவைப் பற்றிய சிந்தனைகளை மனதிலிருந்து சுத்தமாக துடைதெறிந்தால் தான் அடுத்த படத்தைப் பற்றி முழுமையாக யோசிக்க முடியும்.. அதை துடைத்தெடுக்க ஆறு மாதங்கள் ஆச்சு.அடுத்து என்ன கதையைத் தொடலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வருவோம்..சில காலம் அந்த கதையோடு பயணம் செய்து ..வேண்டாம் வேறு கதைக்கு போகலாம் என்று நினைத்து கும்கி கதையை தேர்ந்தெடுத்து அதை படமாக்க சிலகாலம் ஆச்சு.யானையோடு பழகி அதன் பழக்க வழக்கங்களுக்கேற்ப படப்பிடிப்பை நடத்தி முடிக்க ..பருவ நிலை மாற்றம் ..என்று எல்லாவற்றையும் கடந்து கும்கியை நிறைவு செய்த போது பெரிய காலம் கடந்து விட்டது.இரண்டு படங்களின் வெற்றியும் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது.வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.ரசிகன் என்ன விதமான எதிர்பார்ப்போடு வருவான் அவனை முழுமையாக திருப்தி படுத்த வேண்டும். அவன் நூறு சதவீதம் திருப்தி பெறவேண்டுமானால் நாம் ஆயிரம் சதவீதம் உழைக்க வேண்டும். இரண்டாயிரம் சதவீதம் யோசிக்க வேண்டும். இதற்கெல்லாம் இடைவெளி தேவைதான்.முதல் போஸ்டர் , முதல் டீஸர் இதிலேயே ரசிகனை ஈர்க்க வேண்டும். அப்போதுதான் அவனது மனதில் தனியாக தெரிவோம். அப்போதுதான் படத்தை பற்றிய எண்ணம் அவனது மனதில் ஆழமாகப் பதியும்.அதற்காக எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு .என்ன மாதிரியாக படம் எடுக்க வேண்டும் என்று நிறைய உழைக்க வேண்டியது இருக்கு. இதற்கெல்லாம் காலதாமதம் தேவையாகி விடுகிறது.
·
கயல் என்ன மாதிரியான படம் ?
இதில் காதல் இருக்கு என்றும் சொல்ல முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் வழக்கமான படம் இல்லை. வழக்கமான சினிமாவை பத்தாண்டுகளாக ரசிகனும் மறந்து விட்டான் படைப்பாளிகளும் மறந்து விட்டார்கள் . வேறு மாதிரியாக ஒரு பாதையை நோக்கி சினிமா பயணமாகிக் கொண்டிருக்கிறது .சுனாமி தாக்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டது அந்த சுனாமியை இதில் கதைக் கருவாக்கி இருக்கிறேன்.திரையில் கயல் படத்தை பார்க்கும் போது மனசு அப்படியே பதை பதைத்து போகும்..56 டிராக் இசை படத்தை இன்னும் பல மடங்கு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும்.
மைனா , கும்கி, கயல் அடுத்து என்ன மாதிரியான படத்தை எடுப்பதாக உத்தேசம்?
சிங்கத்தை வைத்து ஒரு புதிய முயற்சி எடுக்க எண்ணம் இருக்கு.
·
கயல் படத்தின் ஹீரோ,ஹீரோயினான சந்திரன், ஆனந்தி இருவரைப் பற்றி….
பருவம் அடைந்து சில மாதங்களே ஆன நாயகி வேடத்திற்கு எவ்வளவோ பேரை பார்த்தோம் திருப்தி இல்லை. முடிவில் வந்தவர் ஆனந்தி. முகத்தில் இருந்த குழந்தைத் தனம் கச்சிதமாகப் பொருந்திப் போனார்.
அதே மாதிரி என்ணுடனேயே , என் கதாப்பாத்திரத்துக்கேற்ப பயணமாகிற ஹீரோவாக இருந்தார் சந்திரன். நேரம் காலம் பார்க்காமல் ஒத்துழைக்கிற ஹீரோதான் தேவை.
உங்கள் கதைக்கு பிரபலமான நடிகர்கள் யாரும் பொருந்திப்போக மாட்டார்களா?
பிரபலமான நடிகர்களை என் இழுப்புக்கெல்லாம் இழுக்க விருப்பமில்லை ..அவர்களுக்கு அடுத்தடுத்து கமிட்மெண்ட்ஸ் இருக்கும் ..அதை தடுக்க விருப்பமில்லை .தேவைப் படும் பட்சத்தில் பிரபல நடிகர்களை வைத்து இயக்குவேன்.
இன்றைய ரசிகர்களை பற்றி …..
இன்று உலகம் அவர்கள் கையில். பொய்யான எதையும் சொல்லி அவர்களை ஏமாற்றி விட முடியாது. அவர்களுக்கு தினமும் தங்களை புதுப்பித்துக் கொள்ள ஏராளமான வசதிகள் வந்து விட்டது…அவர்களுக்கு ஈடு கொடுக்க நாமும் தினமும் அப்டேட் செய்து கொள்ள வேண்டி இருக்கு. அப்ப தான் ரசிகர்கள் படத்தோடு ஒன்றிப் போவார்கள்.
*கயல் எப்ப திரைக்கு வரும்?
ஆகஸ்ட் மாதம் எதிர்பார்கலாம். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் நாங்களும் அதற்கான முழு உழைப்பில் இருக்கிறோம்.
இமான் – பிரபு சாலமன் காம்பினேசன் எப்படி?
ஒரே நேர்கோட்டில் ஒரே மாதிரியான சிந்தனையில் இருவருமே பயணிப்பதால் தான் ஹிட் பாடல்களைக் கொடுக்க முடிகிறது. ஹிட் பாடல்கள் படத்திற்கான வெற்றியை நிர்ணயிக்கிறது. அந்த விதத்தில் ஒருவருக்கு ஒருவர் நம்பிகையுடன் இருக்கிறோம் என்றார் பிரபு சாலமன்.