‘மைசூரு பாக்’ பெயர் ’மைசூரு ஸ்ரீ’ என மாற்றம்.. காரணம் என்ன தெரியுமா?

தென் இந்தியாவின், குறிப்பாக கர்நாடக மாநிலத்தின், புகழ்பெற்ற பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று -.மைசூரு பாகு. அங்குள்ள மைசூரு அரண்மனையில் இதன் ஆரம்பகாலம் இருந்ததால், ‘மைசூரு பாகு’ என்று பெயர் பெற்ற இந்த இனிப்பு, தற்போது இந்தியா முழுவதும் விரும்பி உண்ணப்படுகிறது.இந்நிலையில், பெஹல்காம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கடை ஒன்று பிரபலமான ‘மைசூர் பாக்’ உட்பட பல்வேறு இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் உள்ள பிரபலமான இனிப்புக் கடையான தியோஹர் ஸ்வீட்ஸ், முன்பு “பாக்” என்ற பெயரை கொண்டிருந்த அதன் இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளது. உதாரணமாக, மைசூர் பாக் இப்போது இந்த கடையில் மைசூர் ஸ்ரீ என்று அழைக்கப்படுமாம்.மேலும், மோதி பாக், ஆம் பாக் மற்றும் கோண்ட் பாக் போன்ற பிற இனிப்புகள் முறையே மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ மற்றும் கோண்ட் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. ஸ்வர்ன் பாஸ்ம் பாக் மற்றும் சண்டி பாஸ்ம் பாக் உள்ளிட்ட கடையின் பிரீமியம் இனிப்புகளும் ஸ்வர்ன் பாஸ்ம் ஸ்ரீ மற்றும் சண்டி பாஸ்ம் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை சுருக்கமாக ‘பாக்’ என அழைக்கும் வழக்கம் இருப்பதால், அது வாடிக்கையாளர்களுக்கு அசவுகரியத்தை தருவதாகக் கூறி இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ளதாக அந்த இனிப்பகம் விளக்கமளித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்த இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “எங்கள் இனிப்புப் பண்டங்களின் பெயர்களில் இருந்து ‘பாக்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டோம். ‘மோதி பாக்’ என்பதை ‘மோதி ஸ்ரீ’ என்றும், ‘கோண்ட் பாக்’ என்பதை ‘கோண்ட் ஸ்ரீ’ என்றும், ‘மைசூரு பாக்’ என்பதை ‘மைசூரு ஸ்ரீ’ என்றும் பெயர் மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
’மைசூரு பாக்’ என்ற இனிப்பு வகையில், ’பாக்’ என பாகிஸ்தான் பெயர் இருப்பதாக நினைத்து, இந்தப் பெயரை அந்தக் கடைக்காரர் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த இனிப்பு வகையில் உள்ள ‘பாக்’ என்ற சொல் பாகிஸ்தானைக் குறிக்கவில்லை. ’பாக்’ என்றால், கன்னடத்தில் இனிப்பு என்று பொருளாகும்.
தனுஜா