முதல்வரே கவனிங்க! – சாமானியனைச் சாகடிக்கும் ‘கிரண் குராலா’ அறிவிப்பு!
தமிழகப் போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா பிறப்பித்துள்ளதாகக் கூறப்படும் ஓர் அறிவிப்பு, ஒட்டுமொத்த நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தின் மீது வீசப்பட்ட ஒரு கொடூரமான ஏவுகணை! ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களைச் சரக்கு ஏற்றிச் செல்லப் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்று வெளியாகியுள்ள இந்தத் தகவல், எதார்த்தம் புரியாமல் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மனிதாபிமானமற்ற முடிவு.
யாரை ஒடுக்கத் துடிக்கிறது இந்தச் சட்டம்?
சாலையில் டூவீலரில் கீரை விற்பவர், இடியாப்பம், புட்டு, காய்கறி விற்றுப் பிழைப்பு நடத்துபவர் எனப் பல லட்சம் சிறு வியாபாரிகளின் உழைப்பில்தான் இந்தச் சமுதாயத்தின் அடித்தளமே இயங்குகிறது. ஊபர், ரேபிடோ, போர்ட்டர் போன்ற செயலிகள் மூலம் அவசரத்திற்கு ஒரு மருந்தையோ, வயதானவர்களுக்குத் தேவையான பொருட்களையோ அல்லது அலுவலகத்திற்கு மதிய உணவையோ கொண்டு சேர்க்கும் சாமானியர்களைக் குறிவைப்பது எந்த விதத்தில் நியாயம்? இவர்களா பெரும் கடத்தல்காரர்கள்? மதிய உணவையும், சமோசா-கடலை பர்பியையும் கொண்டு செல்வது குற்றமா?

பகற்கொள்ளை அடிக்கும் மினி லாரிகள்!
ஒரு சிறிய விருந்துக்கோ அல்லது வீட்டுத் தேவைக்கோ சில பொருட்களைக் கொண்டு செல்ல மினி டெம்போ அல்லது லாரிகளை அணுகினால், அவர்கள் கேட்கும் வாடகை அந்தப் பொருட்களின் அசலை விட அதிகமாக இருக்கிறது. ‘கழுத்தை அறுக்கும்’ இந்த வாடகைக் கொள்ளையைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாத இந்தத் துறை, குறைந்த செலவில் சேவையாற்றும் ஏழைகளின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய மட்டும் துள்ளிக் குதிப்பது ஏன்?
கல்லா கட்டும் அதிகாரிகளும், கல்லா இழக்கும் மக்களும்!
ஊபர், ரேபிட்டோ செயலிகளில் காட்டும் தொகையை விட 50 முதல் 200 ரூபாய் வரை கூடுதலாக டிமாண்ட் பண்ணும் டிரைவர்களைக் கட்டுப்படுத்த வக்கற்ற போக்குவரத்துத் துறை, இப்போது உழைக்கும் வர்க்கத்தைச் சிதைக்கத் துணிந்துவிட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) திடீர் சோதனை நடத்தி வாகனங்களைப் பறிமுதல் செய்வது, அதிகாரிகளின் ‘லஞ்சக் கல்லாவை’ நிரப்புவதற்கான ஒரு குறுக்கு வழி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
தமிழக முதல்வர் கவனத்திற்கு…
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே… சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, சிறு தொழில்களை நசுக்கும் இந்த விவேகமற்ற அறிவிப்பு உங்கள் ஆட்சிக்கே அவப்பெயரைத் தேடித்தரும். சட்டங்கள் என்பவை மக்களின் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, அவர்களின் வயிற்றிலடிக்க அல்ல! எனவே, உடனடியாகத் தலையிட்டு, போக்குவரத்து ஆணையரின் இந்த ‘மக்கள் விரோத’ அறிவிப்பைக் குப்பைத் தொட்டியில் வீசச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நிலவலம் ரெங்கராஜன்


