June 1, 2023

‘மாயை’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை..!தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் அதிரடி

புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘மாயை’. இந்த படத்தை கண்ணன் என்பவர் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்துக்கு முதலில் ‘சை’ என பெயரிட்டு சென்னை புரொடெக்ஷன் பட நிறுவனம் சார்பில் எழில் இனியன் என்பவர் தயாரித்தார். படத்தை தயாரித்ததோடு, படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாகவும் நடித்திருந்தார் எழில்.

‘சை’ என்ற பெயருக்கு தமிழில் அர்த்தம் இல்லாததால் அதற்கு பதில் படத்துக்கு ‘மாயை’ என பெயர் வைத்தார்கள்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி இசைசேர்ப்பு முடிந்த நிலையில் திடீரென படத்தில் நடித்த ஹீரோயின் சரியாக நடிக்கவில்லை, எனவே ,வேறு ஹீரோயின் போட்டு புதிதாக காட்சிகளை சேர்க்கலாம் என இயக்குனர் கண்ணன் தயாரிப்பாளர் எழிலிடம் சொல்லியிருக்கிறார்.
sep 1 - mayai movie mini
ஹீரோயினாக ‘காதல்’ சந்தியாவை ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப்புக்கு வந்த சந்தியாவுக்கு தரப்பட்ட காஸ்டியூம்கள் மிக கவர்ச்சியாக இருந்ததால் அதை அணிந்து நடிக்க மறுத்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு சந்தியா வெளியேறினார்.

இது தொடர்பாக இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே கடும் விவாதம் நடந்துள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாத நிலையில் இயக்குனர் கண்ணனும், தயாரிப்பாளர் எழில்இனியனும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.

அந்த ஒப்பந்தப்படி இயக்குனர் கணணன் படத்தின் சில காட்சிகளை மாற்றியமைத்து படத்தை முடித்து, 6 மாதத்திற்குள் தயாரிப்பாளர் எழில்இனியனுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட்டு படத்தை வெளியிடலாம் என குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த சூழலில், தனது பெயரையே தயாரிப்பாளர் என போட்டு ஆடியோ வெளியீடையும் முடித்துக் கொண்ட இயக்குனர் கண்ணன் ஏற்கனவே போட்டிருந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும் தயாரிப்பாளர் எழிலுக்கு பணம் திரும்ப தராமல் ஏமாற்றிவந்தார். அதோடு, வேறு பட நிறுவனம் சார்பில் படத்தை வெளியிடுவதற்கு விளம்பரமும் செய்ய ஆரம்பித்தார்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் கண்ணன் மீது தயாரிப்பாளர் எழில் இனியன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்த சூழலில் தயாரிப்பாளர் எழில்இனியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மாயை’ இயக்குனர் கண்ணன் மீது வழக்கு தொடர்ந்தார். அதோடு பணத்தை செட்டில் செய்யாமல் ‘மாயை’ பட வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

வக்கீல்கள் செந்தில், குமரேசன் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனு நீதியரசர் சுதாகர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எழில் சார்பில் சார்பில் தமிழ்நாடு,பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம் ஆஜரானார்.

மனு விசாரணைக்கு பிறகு ‘மாயை’ பட வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

கோடங்கி