மானத்துக்கு விலை போன ஜூனியர் விகடன்!

கடந்த 2012-ம் வருடம் வாரமிருமுறை வெளியாகும் இதழ்களில் ஒன்றான ஜூனியர் விகடனில், சேது சமுத்திரத் திட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., ஈடுபட்டதாகவும், மேலும் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாகவும் கேள்வி பதில் பகுதியில் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு மறுப்புடன் கண்டனம் தெரிவித்த டி.ஆர்.பாலு எம்.பி., ஜூனியர் விகடன் இதழுக்கு எதிராக கடந்த 2014ஆம் ஆண்டு சிவில் மான நஷ்டஈடு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
டி.ஆர்.பாலு தாக்கல் செய்த மனுவில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டதாகவும், இந்த செய்திகள் முழுக்க அவதூறு செய்தி என்றும், ஆதாரமற்றவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இனி தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரை பற்றியும் செய்திகளை வெளியிட ஜூனியர் விகடனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திருந்தார். கூடவே தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட கோரியும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலு தொடர்பான செய்திகள் வெளியிட ஜூனியர் விகடன் வார இதழுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் இந்த அவதூறு செய்திக்காக ஜூனியர் விகடன், பாதிக்கப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.