மவுலிவாக்கம் கட்டட விபத்து நிவாரணம்: காசோலையை மாற்றத் தடை கோரி இறந்தவரின் தாய் வழக்கு

மவுலிவாக்கம் கட்டட விபத்து நிவாரணம்: காசோலையை மாற்றத் தடை கோரி இறந்தவரின் தாய் வழக்கு

மவுலிவாக்கம் கட்டட விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு வழங்கிய ரூ.7 லட்சத்துக்கான காசோலையை மாற்றத் தடை கோரி இறந்தவரின் தாய், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மனுவுக்கு பதிலளிக்குமாறு வருவாய்த் துறை முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் வட்டாட்சியர், முருகேசன் மனைவி செல்வி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
jaya in july 11
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, வடகரையைச் சேர்ந்தவர் பேபி சரோஜா (75). இவரது மகன், கட்டடத் தொழிலாளியான முருகேசன் மவுலிவாக்கம் கட்டட விபத்தில் இறந்தார். அதையடுத்து, அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முருகேசனின் தாயார் பேபி சரோஜா, மேற்படி வாரண நிதி காசோலையை மாற்றத் தடை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்: எனது மகன் முருகேசனைவிட்டு, அவரது மனைவி செல்வி மற்றும் மகன் முத்துவேல் ஆகியோர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டனர். அருப்புக்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இப்போது வசித்து வருகின்றனர். நானும், எனது மகனும் கொடுமைப்படுத்தியதாக போலீஸில் அவர் பல்வேறு புகார்கள் அளித்துள்ளார்.

முருகேசனை நம்பியே நான் வாழ்ந்து வந்தேன். இந்த நிலையில், சென்னை மௌலி வாக்கம் கட்டட விபத்தில் முருகேசன் இறந்துவிட்டார். இதற்கான நிவாரணத் தொகையைப் பெறுவதற்காக திருமங்கலம் வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஆகியோர் அழைத்ததன்பேரில் சென்னை சென்றேன். முருகேசன் மனைவியும் அங்கு வந்திருந்தார். அதிகாரிகள் செல்வியை மட்டும் அழைத்து ரூ.7 லட்சத்துக்கான காசோலையை ஒப்படைத்தனர். எனக்கு பங்களிக்குமாறு கேட்டதற்கு, செல்வியிடம் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டனர். ஆனால் செல்வி எனக்கு பணம் தர மறுத்துவிட்டார். மேற்படி நிவாரணத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பெற எனக்கு உரிமை உள்ளது. முருகேசனின் சட்டபூர்வ வாரிசு என்று சான்றளித்து செல்வியிடம் காசோலையை அளித்துள்ளனர். எனவே, காசோலையை அவர் வங்கியில் பணமாக மாற்றுவதைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மனுவுக்கு பதிலளிக்குமாறு வருவாய்த் துறை முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் வட்டாட்சியர், முருகேசன் மனைவி செல்வி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

error: Content is protected !!