மக்களைவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 -மாக உயர்ந்த பிரணாப் கோரிக்கை!

பார்லிமெண்ட்டின் லோக் சபை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தவேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக புது டெல்லியில் கருத்தரங்கம் ஒன்று நடை பெற்றது. அதில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றிய போது, ”தேர்தலில் சில கட்சிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை பலம் கிடைக்கலாம். ஆனால் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒரு கட்சியை ஆதரித்த வரலாறு நமது நாட்டுக்கு கிடையாது. இதனை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மைவாத சிந்தனையுடன் செயல்படக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கி வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது அவசியமாகும்.
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். பாராளுமன்றத்தின் பலம் கடந்த 1977ம் ஆண்டில் கடைசியாக திருத்தி அமைக்கப்பட்டது. 1971ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது.
இப்போது அது 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது. எனவே மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அப்படி, 1000 உறுப்பினர் களாக உயர்த்தப்பட்டால், பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவையும், தற்போதுள்ள மக்களவையில் மாநிலங்களவையையும் மாற்றியமைக்கவேண்டும்
பிரிட்டன் பாராளுமன்றத்தில் 650 உறுப்பினர்களும், கனடா பாராளுமன்றத்தில் 443 உறுப்பினர் களும், அமெரிக்க காங்கிரஸ் சபையில் 535 உறுப்பினர்கள் இருக்கும்போது, இந்திய பாராளு மன்றத்தில் மட்டும் ஏன் அத்தனை உறுப்பினர்கள் இருக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
”ஒரு மக்களவை தொகுதியில் 16 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளர்கள் உள்ளனர். இத்தனை பேருக்கு ஒரே ஒரு பிரதிநிதி இருந்தால் அவரால் எப்படி வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
2018 ஜூன் 15இன் கணக்கெடுப்பின்படி தற்போது இந்திய மக்களவையில் 545 உறுப்பினர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.