மகாராஷ்டிரா : ஆட்சிப் பொறுப்பில் இருந்து வெளியேறத் தயார்! – சிவசேனா அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்எல்ஏக்கள் 30 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அந்த அணியில் இன்று மேலும் 4 எம்எல்ஏக்கள் இணைந்ததால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 2019-ல் இந்தக் கூட்டணி பதவியேற்றது. முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே வெல்ல வாய்ப்பிருந்த நிலையில் சுயேச்சைகள், பிறகட்சி எம்எல்ஏக்கள் என 23 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் 3-வது எம்.பி. பதவியையும் பாஜக வென்றது. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மேலவை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது.
மேலவைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டப்பேரவைக் குழு தலைவரான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரும் திடீரென மாயமாயினர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயுடன் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்துக்கு இரவோடு, இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது பின்னர் தெரியவந்தது.
ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 30 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் சூரத்திலிருந்த அசாம் மாநிலம் குவாஹாட்டிக்குச் சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூரத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியிருந்த சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்மு,க் நேற்று காலை மும்பை திரும்பினார். தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், தனக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டதாகவும், தான் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் மேலும் 4 எம்எல்ஏக்கள் தீபக் கேசர்கர், சதா சர்வாங்கர், மங்கேஷ் குடால்கர் மற்றும் சஞ்சய் ரத்தோட் ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்துள்ளனர். இதனால் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் பலம் 35 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில் ”சட்டப்பேரவை உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு சூரத்தில் இருந்து குவஹாட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியேறியவர்கள் சிவசேனா அல்ல. மும்பை தெருக்களில் நாம் பார்த்ததுதான் உண்மையான சிவசேனா. எங்கள் கட்சி பலமாக உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் எங்களை விட்டு விலகுவதால் நாங்கள் பலவீனமாகவில்லை. சுமார் 17-18 பேர் பாரதீய ஜனதா கட்சியின் காவலில் உள்ளனர். நாங்கள் 20 எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்’ என்றார்.
இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை முறித்து கொள்ள தயாராக இருப்பதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதுபற்றி சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் கூறியதாவது: மகாவிகாஷ் அகாடி கூட்டணியில்(சிவசேனா+ தேசியவாத காங்கிரஸ்+ காங்கிரஸ்) இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் அதுபற்றி அவர்கள் மும்பை வந்து உத்தவ் தாக்கரேவை சந்தித்து அவர்கள் கூற வேண்டும். நிச்சயமாக அதனை பற்றி யோசிப்போம். ஆனால் கவுஹாத்தியில் இருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம்.
உண்மையான சீடர்கள் யார்? கவுஹாத்தியில் ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏக்களில் 20 பேர் தொடர்பில் உள்ளனர். அமலாக்க பிரிவினரின் விசாரணைக்கு பயந்து கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் பால்தாக்கரேவின் உண்மையான சீடர்கள் இல்லை. தற்போதைய சிவசேனா எ்னபது உத்தவ் தாக்கரேவின் கீழ் பால் தாக்கரேவின் பணியை செய்து வருகிறது. பால்தாக்கரேவை ஆதரிக்கிறேன், பின்பற்றுகிறேன் என வெறும் வாயில் கூறுவது அவரது சீடர் என்பதை நிரூபிக்காது. கட்சி வலுவாகவே உள்ளது நான் எந்த முகாம் பற்றியும் பேசமாட்டேன். என் கட்சியைப் பற்றி பேசுவேன். இன்று வரை சிவசேனா கட்சி வலுவாகவே உள்ளது. எங்களுடன் 20 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர். அவர்கள் யார் என்பது பற்றிய விபரம் மும்பைக்கு வந்ததும் தெரியும். இந்த எம்எல்ஏக்கள் எத்தகைய சூழலில் எங்களை விட்டுச்சென்றார்கள் என்பது விரைவில் தெரியவரும்” என்றார்.