June 7, 2023

பொருளாதார சிக்கலில் இந்தியா!

இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார நிலை குறித்து, S&P என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதாரம் இந்தாண்டு 1.3 சதவீதம் சரிவை சந்திக்கும் எனவும், அடுத்தாண்டு 6.9% வளர்ச்சி அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார பாதிப்பானது 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருக்கும் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதார நிலை அதிக சிக்கலில் உள்ளதாக S&P நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலும், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் பொருளாதார பாதிப்புகள் அதிகம் இருக்கும் என கருதுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதே வேளையில், சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டும், அடுத்தாண்டும் தொடர்ந்து வளர்ச்சியடையும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, நடப்பாண்டில் சீன பொருளாதாரம் 1.2% வளர்ச்சியும், அடுத்தாண்டு 7% வளர்ச்சியும் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான், தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்காமல் மீண்டு விட்டதால் அவற்றின் பொருளாதாரம் 0.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வரை மட்டுமே பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய S&P நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் Shaun Roach, ஆசிய பசிபிக் நாடுகள் கொரோனாவை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி வருவதாகவும், இது பொருளாதார வளர்ச்சிக்கு பாலமாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, சர்வதேச நாணய நிதியம் நடத்திய ஆய்விலும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் இந்தாண்டு 4.5 சதவீதம் வீழ்ச்சியடையும் எனவும், அடுத்தாண்டு 6% வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது..