பொது முடக்கம் 5ம் கட்டம் : மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் முழு விபரம்!

பொது முடக்கம் 5ம் கட்டம் : மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் முழு விபரம்!

கொரோனா பொது முடக்கத்தின் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டு உள்ளது. திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5-ம் தேதி முதல் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் மேலும் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இம்மாதம் முப்பத்தோராம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, வரும் 15-ம் தேதிமுதல் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் திரை யரங்குகளை ஐம்பது சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15-ம் தேதிமுதல் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக நீச்சல் குளங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், வர்த்தக நோக்கத்தில் நடைபெறும் கண்காட்சிகளும் இம்மாதம் 15-ம் தேதிமுதல் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களைத் திறக்க அனுமதியளிக்கப்பட்ட போதிலும், இதுகுறித்து இம்மாதம் 15-ம் தேதிக்குப் பின்னர் மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. நிலைமைகளை மதிப்பீடு செய்து பள்ளி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகத்துடன் மாநில அரசு கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட வேண்டும். ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்விமுறை தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. கல்லூரி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் மட்டும் சமுக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, மத மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளை 100 நபருக்கு மிகாமல் நடத்திக் கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது தொடரும் என்றும், 100 பேருக்கு மேல் அனுமதிப்பது குறித்து இம்மாதம் 15-ம் தேதிக்குப் பிறகு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நோய் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பராமரித்தல், உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்டவை கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களைப் பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதிகளில் அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Related Posts

error: Content is protected !!