பெருகும் சூழல் அபாயம்: புதிய கண்டுபிடிப்பு கூறுவது என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பெருகும் சூழல் அபாயம்: புதிய கண்டுபிடிப்பு கூறுவது என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் நீரின் அளவு 0.5 வரை உயரும் என்பதே இதுவரை கூறப்பட்டு வந்த செய்தியாகும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆய்வு ஒன்று இந்தக் கணிப்பைத் தவறு என்கிறது. ஓஷன் சயின்ஸ் எனும் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில் இதுவரை இருந்த மாதிரிகளில் போதாமை இருக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் கடல் மட்டம் அதிகரிப்பு அரை மீட்டர் வரையில் 0.5 செல்ஷியஸ் டிகிரி வெப்பம் அதிகரிப்பால் நிகழும் என்கிறது அந்த ஆய்வு. எனவே அரசுகள் அதிரடியாக 200 பில்லியன் மெட்ரிக் டன் அளவுள்ள சூழல் மாசு அளவைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது இந்த ஆய்வு. இந்தளவுக்கான மாசு சுமார் ஐந்தாண்டுகளில் ஏற்படக்கூடிய ஒன்றாகும் என்று குறிப்பிடுகிறது.

இப்போதிருக்கும் சூழலியல் கொள்கைகள் தொடருமானால் 1 செல்ஷியஸ் கூடுதல் வெப்பத்தில் 2 மீட்டர் வரை கடல் மட்டம் உயரும் என்று இந்த ஆய்வு முடிவு கூறுகிறது. இம்முடிவுகள் கடந்த மாதம் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையான 28 டிரில்லியன் மெட்ரிக் டன் பனிக்கட்டிகள் ஏற்கனவே உருகியுள்ளன என்பதை சுட்டுவதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அபாயம் கடல் ஓரங்களில் வசிக்கும் மக்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியோரை ஆபத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியதுள்ளதும், இன்று வரை மீட்புப் பணிகளும் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறதும் உணர்த்தும் செய்தி நாம் சூழலியல் விஷயத்தில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதையே. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலம் முழுவதுமே அபாயத்தில் இருக்கிறது எனும் பழைய காலநிலை மாறுபாடு கணிப்புக்குழுவின் எச்சரிக்கையைப் பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது. நிபுணர்கள் வேறொரு ஆபத்தையும் சுட்டுகின்றனர். அது திடீரென எழும் மீத்தேன் வாயுக்களின் அளவு. கடலுக்கு அடியிலுள்ள மீத்தேன் வாயுக்கள் திடீரென எழுந்தால் பசுமை இல்ல விளைவு கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு அதிகரித்து ஒட்டுமொத்த புவிப்பரப்பையுமே மாற்றிவிடக்கூடும்.

கரிய-அமில-வாயுக்களின் அளவு நாள்தோறும் அதிகரித்தே வருகிறது. பணக்கார நாடுகள் ஒருபுறம் பெரும் பொருட்செலவில் இவ்வாயுக்களின் அளவைத் தடுத்தாலும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளால் உடனடியாக பெரும் செலவு செய்து சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த இயலாது. ஆயினும் கூட இந்திய அரசு பல சூரிய ஒளித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் வழங்கும் முயற்சியும் இதில் அடங்கும். வீட்டுச் சமையலுக்கான சூரிய ஒளி அடுப்புகளையும் பேரளவில் அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

நகரங்களில் மின் வாகனங்களும் தங்களின் இருப்பைத் தெரிவித்தாலும் அடுத்த சில ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கையும் பெருக வேண்டும். வீடுகளில் பரவலாக சூரிய ஒளிப்பயன்பாடு ஏற்பட வேண்டும். இதன் மூலம் பேரளவில் கரியின் மூலம் மின்சார உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். பெட்ரோல், டீசலின் பயன்பாடு எந்தளவு வேகமாக குறைகிறதோ அந்தளவிற்கு பூமிப்பந்தையும் நாம் காப்பாற்ற முடியும் என்பதே இன்றுள்ள யதார்த்தம்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts