பிரதமர் மோடியைச் சந்தித்து 64 பக்க கோரிக்கை மனுவை அளித்தார் முதல்வர் ஜெயலலிதா!

பிரதமர் பதவி ஏற்ற பின் மோடியை முதல் முறையாக ஜெயலலிதா சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் ஜெயலலிதா 50 நிமிடம் மோடியை சந்தித்து பேசினார்..அப்போது தமிழக மீனவர் பிரச்னை, முல்லைப்பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட 64 விதமான பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுமாறு கேட்டுக்கொண்டார்.பின்னஃர் இது குறித்து பேசிய ஜெயலலிதா,” மாநிலங்களவையில் மோடி அரசுக்கு ஆதரவு தருவது பற்றி தேவைப்படும் போது முடிவு செய்யப்படும் என்றும் தற்போது மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால் பாஜ அணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தேவை இல்லை என்று கூறினார்.
தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார். காலை 11 மணிக்கு டெல்லி வந்த ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லம் சென்றார். அவருக்கு மோடியை சந்திக்க பகல் 1 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி செல்ல நேரிட்டது.
இதன்காரணமாக மோடி – ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஏற்கனவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிற்பகல் 2.45 மணிக்கு சந்தித்தார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் போது, தமிழகத்திற்கு தேவையான நிதிகள், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் மற்றும் தமது கோரிக்கைகள் அடங்கிய 64 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றையும் அவர் அளித்தார்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, “64 பக்க கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளேன். விற்பனை வரி குறைக்கப்பட்ட போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்கவில்லை. அந்த நிதியை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.மேலும், முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குழுவை விரைவில் அமைக்கவும், காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணைகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.தமிழக மின் பிரச்னையில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் எனவும், கூடங்குளம், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15 சதவீதத்தை தமிழகத்திற்கு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். இலங்கை பிரச்னை, மீனவர் விவகாரத்தில் தமிழர் நலன் காக்கவும் பிரதமரை வலியுறுத்தினேன்.தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் மோடி பரிவுடன் கேட்டறிந்தார்” என்றார்.