June 2, 2023

பிபிசி வோல்ட் நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை!

சீன அதிபர் ஜின்பிங் குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்தி வெளியிட்டதாக கூறி பிபிசி வோல்ட் நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது. பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சீன தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான National Radio and Television Administration வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி வோல்ட் நியூஸ் தொலைக்காட்சியில் சீனா தொடர்பான செய்திகள் தீவிரமாக மீறப்பட்டுள்ளது, செய்திகள் உண்மைக்கு புறம்பாகவும், உகந்த முறையிலும் இல்லை. இது சீனாவின் தேசிய எண்ணங்களை காயப்படுத்தியதுடன், தேசிய ஒற்றுமையை குறைமதிப்பிற்கு தள்ளியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து பிபிசி கூறும்போது, “ சீன அதிகாரிகளின் இந்த முடிவு எங்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. பிபிசி என்பது நம்பகத்தன்மையான செய்தி நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் உள்ள செய்திகளை நியாயமாகவும் பாரபட்சமின்றி, எந்தவித ஆதரவும் இல்லாமல் வழங்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளது..

அதாவது சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. தற்போது உலக வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சினை குறித்து தவறான செய்திகளை பி.பி.சி. உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து பி.பி.சி. செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதிக்க இருப்பதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. மேற்கூறிய காரணங்களால் சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தேவையை பிபிசி இழந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு அதன் விண்ணப்பத்தையும் சீனா ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பி.பி.சி. உலக செய்திகள் ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நீட் பிரைஸ் கூறுகையில், பி.பி.சி. செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன் மூலம் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.