பாஜக-வில் இணைந்தது ஏன்? கமல் கட்சி நிர்வாகி அருணாச்சலம் விளக்கம்!
மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன் என்று மநீம நிர்வாகி அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். சென்னைக்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தி.நகர் கமலாலயத்தில் அருணாச்சலம் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.அருணாசலம்.
இந்நிலையில் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்ய முன்னாள் பொதுச்செயலாளர் அருணாச்சலம், “விவசாயிகள் நலன் கருதி பாஜகவில் இணைந்து உள்ளேன். தொலைநோக்கு சிந்தனையுடன் 3 வேளாண் சட்டங்களை பாஜக வழிவகுத்துத் தந்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்க கேட்ட போது, கமல் உள்ளிட்ட நிர்வாகிகள் அதற்கு எதிராக முடிவெடுத்தனர்.விவசாய சட்டம் குறித்து கமல் ஹாசன் தவறான புரிதலில் இருக்கிறார். எதையும் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.
மேலும் பாமக தமிழ் சமூக ஊடக பிரிவின் தலைவர் சோழன் குமார் வாண்டையாரும் பாஜகவில் இணைந்தார்.