பருவமழை பொய்த்தது:பிரதான அணைகளில் நீர் இருப்பு பாதியாகச் சரிவு!

பருவமழை பொய்த்தது:பிரதான அணைகளில் நீர் இருப்பு பாதியாகச் சரிவு!

தென்மேற்குப் பருவமழை தொடங்கி 5 வாரம் கடந்தபோதிலும் மழையே பெய்யாததால், திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்தவாறு உயரவில்லை. இதனால், கார்பருவ சாகுபடிக்கு முழுமையாகத் தண்ணீர் வழங்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் தென்மேற்குப் பருவத்தில் நிகழாண்டில்தான் மழை தீவிரம் அடையவில்லை என்றும், அணைகளின் நீர் இருப்பும் 43 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
monsoon south west
தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. எனினும் மழை நீடிக்கவில்லை.இதனால், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தாமதம் ஏற்பட்டு, தாமிரவருணி பாசனத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய கார் பருவ சாகுபடிப் பணியை விவசாயிகள் ஜூலை முதல் வாரத்தில்தான் தொடங்கியுள்ளனர்.

இப்பாசனத்தில் முதல் கட்டமாக ஜூலை 4-ஆம் தேதி பாபநாசம் அணையிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 4 கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று வரும் 18,090 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.மணிமுத்தாறு அணையிலிருந்து ஜூன் முதல் தேதியில் பெருங்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 2 ஆயிரத்து 786 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து ஆழ்வார்குறிச்சி, கடையம், கீழ ஆம்பூர் பகுதியில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து, விவசாயிகள் முழுவீச்சில் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதலாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு 1,100 கன அடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 175 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.தாமிரவருணி பாசனத்தில் இம்மாவட்டத்தில் திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

தென்மேற்குப் பருவமழை தொடங்கி 5 வாரங்கள் கடந்தபோதிலும் மழை நீடிக்காததால், அணைகளின் நீர் இருப்பு கவலை அளிப்பதாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் தென்மேற்குப் பருவத்தில் நிகழாண்டில்தான் மழை தீவிரம் அடையவில்லை என்றும், அணைகளின் நீர் இருப்பும் 43 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2013, ஜூலை 13-ஆம் தேதி 122.75 அடியாக இருந்தது. நிகழாண்டு அதே தேதியில் 59.40 அடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இது 48.3 சதவீதம் குறைவு.சேர்வலாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 134.25 அடியாக இருந்தது. இப்போது 69.95 அடியாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 52.1 சதவீதம் குறைவாகும்.பிரதான அணைகளான இவ்விரு அணைகளின் நீர்மட்டம் 100 அடியைக் கூட எட்டாத நிலையில், தற்போதைய நீர் இருப்பின் மூலம் பாசனத்துக்கு முழுமையாகத் தண்ணீர் வழங்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

error: Content is protected !!