பதினாலும் பெற்று பெருவாழ்வு…!

பதினாலும் பெற்று பெருவாழ்வு…!

தென்னிந்தியாவிலேயே வீட்டில் 14 யானைகளை வளர்க்கும் பெருமையைப் பெற்றுள்ளது ஒரு தமிழ்க் குடும்பம்!வேழம், வழுவை, களபம், மாதங்கம், கைம்மா, உம்பல், அரசுவா, அல்லியன், ஆம்பல், இபம், எறும்பி, பெருமா, வாரணம், தந்தி இவை எல்லாம் என்ன என்று குழம்பாதீர்கள். இந்தப் பதினான்கும் யானைக்கு தமிழர்கள் சூட்டிய பொதுப்பெயர்கள். அப்படியே இதையும் படித்துவிடுங்கள். விஜயன், கணபதி, ஐயப்பன், கர்ணன், சரண ஐயப்பன், கணேசன், கஜேந்திரன், முகுந்தன், கிருஷ்ணன் குட்டி, ராமச்சந்திரன், குருவாயூரப்பன், ராஜன், கண்ணன், சிண்டுமோன் – இவையும் யானைகளின் பெயர்கள்தான். பரமேஸ்வரன், ஹரிதாஸ் என்கிற இரண்டு சகோதரர்கள் வளர்க்கும் பதினான்கு யானைகளின் பெயர்கள்.
elaphant family
பாலக்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த, ‘யானை பிரதர்ஸ்’ (இதுதான் இவர்களின் செல்லப்பெயர்) வசிக்கும் மங்களம்குன்னு. வீட்டின் நுழைவாயிலிலேயே யானைகளின் சிலைகள் இருபக்கமும் நம்மை வரவேற்கின்றன. ஹால் சுவர் முழுக்க யானைகளின் போட்டோக்கள், ஷோ கேஸில் அவை பெற்ற பல விருதுகள். வீட்டுக்கு எதிரிலேயே ஒரு யானைக்கவுனி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் மாடு, கன்றுகளைப் போல யானைகள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன.

பிரமிப்பான நமது பார்வையே கேள்வியாக, இளையவரான ஹரிதாஸ் பேச ஆரம்பித்தார்: எங்களுக்கு பூர்வீகம் தமிழ்நாடு. எங்க தாத்தா காலத்திலேயே இங்க வந்து குடியேறிட்டோம். கடந்த 40 ஆண்டுகாலமா பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே இந்த 14 யானைகளை பிள்ளைகள் போல வளர்த்து வர்றோம். சின்ன வயசுலருந்தே எங்க வீட்ல வளர்க்கறதுக்கு காளை, எருது, நாய்ன்னு வீட்டு விலங்குகளை வாங்குவோம். அப்படித்தான் எங்களுக்கும் யானை வாங்கணும்ன்னு ஆசையா இருந்துச்சு. கடந்த 1972-ஆம் ஆண்டுதான் முதன்முதலா யானை வாங்க ஆசைப்பட்டு கிளம்பினோம். பீகார்ல சோன்பூர் சந்தையில் எங்களோட முதல் யானை ஐயப்பன் குட்டியை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வீட்டுக்கு ஏத்திட்டு வந்தோம். ஐயப்பன் குட்டியை வீட்டுல இருக்கிற எல்லோருக்குமே புடிச்சிப்போச்சு. அதுலருந்து ஒவ்வொரு வருஷமும் யானைகளை வாங்க ஆரம்பிச்சோம்” என்று சொல்லி நிறுத்த, மூத்தவர் பரமேஸ்வரன் தொடர்கிறார்:

எங்ககிட்ட இருக்கிறதெல்லாமே ஆண் யானைகள்தான். நீங்க வழக்கமா பார்த்திருக்கிற யானைகள் பெரும்பாலும் ஒன்பதே முக்கால் அடி உயரம்தான் இருக்கும் ஆனா, இந்த யானைகள் பத்தே முக்கால் அடி உயரம் கொண்டவை. தென்னிந்தியாவிலேயே வீட்டில் அதிகமாக 14 யானைகளை வைத்திருப்பது எங்க குடும்பம்தான்.

அதுவும், இந்த யானைகள் ஒவ்வொன்றும் 18 நகங்கள் கொண்டவை. 18 நகங்கள் இருந்தா மட்டுமே, அது ஆரோக்கியமான யானைன்னு அர்த்தம். நகத்தில் புள்ளிகள் எதுவும் இல்லை. இப்படியிருக்கும் யானைகளை நீங்க பார்ப்பது அரிது. இது எல்லாமே இருந்தாதான் யானைகளுக்கு சிறப்பு.

அதனாலதான், தமிழக முதல்வர் யலலிதாவின் விழாக்களுக்கு எங்களது யானைகளைத்தான் கேட்பார்கள். வாடகைக்கு அனுப்பி வைப்போம். அதுமட்டுமில்ல, அதோ இருக்கானே விநாயகம் (யானையின் பெயர்தான்) ரஜினிகாந்த் நடிச்ச, ‘முத்து’ படம், சரத்குமார் நடிச்ச, ‘நாட்டாமை’ படம்… அப்புறம் நிறைய தமிழ் சினிமாக்களில் நடிச்சிருக்கான். கேரளாவுல மம்முட்டி, மோகன்லால் படங்களில் ஆரம்பிச்சு பி.பி.எல். டி.வி. விளம்பரம், செட்டிநாடு சிமெண்ட் விளம்பரம்ன்னு பல விளம்பரங்களில் எங்க யானைகள்தான் கலக்கிக்கிட்டிருக்கு.

ஒரு யானையை வளர்க்கிறதே சவாலான விஷயம். அப்படியிருக்கும்போது பதினாலு யானைகளை வளர்க்கிறதுங்குறது மிகப்பெரிய சவால். மனிதர்களுக்கு வரக்கூடிய தலைவலி, ஜுரம், பி.பி., ஷுகர்ன்னு அத்தனை வியாதிகளும் யானைகளுக்கும் வரும்.பிள்ளைகளை நாம எப்படி பாதுக்காக்கிறோமோ அப்படித்தான் யானைகளையும் பராமரிக்கணும்” என்கிறார்.

இத்தனை யானைகளுக்கான செலவை எப்படி சமாளிக்கிறார்கள்? எங்களுக்கு சொந்தமா 200 ஏக்கர் ரப்பர்த் தோட்டமும் 100 ஏக்கர் தென்னந்தோப்பும் நெல் வயல்களும்னு நிறைய சொத்துக்கள் இருக்கு. அதுல வர்ற வருமானத்தை வைத்துதான் யானைகளை பராமரிக்கிறோம். ஒவ்வொரு யானைக்கும் தினமும் 10 கிலோ அரிசி சாதம், 1 கிலோ பேரீச்சை, 2 கிலோ அவல், வெல்லம், டானிக், மூலிகை கலந்த சாப்பாடு, தென்னை ஓலை, கரும்பு, வாழைப்பழம், அன்னாச்சிப் பழம், தர்பூசணின்னு சாப்பிடக் கொடுக்கிறோம். அதுவே உடம்புக்கு சரியில்லன்னா தண்ணி, பழம் கூட சாப்பிடாது. ஆரம்பத்துல நாங்களேதான் யானைகளை பார்த்துக்கிட்டு எல்லா வேலைகளையும் செஞ்சோம். பிறகு யானைகளோட எண்ணிக்கை அதிகமாக அதிகமாக சிரமமா இருக்கவே, பாகன்களை வேலைக்கு வெச்சுக்கிட்டோம். இந்த யானைகளை சுத்தமாக வைத்து பராமரிக்கவும்,வெளியூர் விழாக்களுக்கு கூட்டிச்செல்லவும் எங்கக்கிட்ட 44 பாகன்கள் வேலை பார்க்கிறாங்க. ஒரு நாளைக்கே யானைகள் உணவுக்கும், பாகன்கள் சம்பளத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய்க்கிட்ட செலவாகுது.

யானைகளை விசேஷங்களுக்கு அனுப்பறதால எங்களுக்கு வருமானமும் வருது. ஆனா, முன்ன மாதிரி இல்ல. மிருகங்களை படங்களில் நடிக்க வைக்க நிறைய கட்டுப்பாடுகளும் தடைகளும் வந்ததால் ரொம்பவே சிரமப்பட்டுக்கிட்டிருக்கோம். வெளியூர் விழாக்களுக்கோ, சுபகாரியங்களுக்கோ யானைகளைக் கொண்டுசெல்ல ஃபாரஸ்ட் ஆபீஸர்களிடம் அனுமதி வாங்கறதுல சிக்கல்களும் நிறைய, செலவுகளும் அதிகம். இப்படி, வருமானத்துக்கு சமமா செலவுகளும் இருக்கு. அதுவும், யானைகளைப் பொறுத்தவரை 6 மாதங்களுக்கு மட்டும்தான் விசேஷங்களுக்கு அனுப்புவோம். மீதமுள்ள ஆறு மாதங்கள் அவனுங்களுக்கு ரெஸ்ட்டுதான். இந்த யானைகளை 5 கோடி ரூபாய் வரை விலைக்குக் கேட்டிருக்காங்க. ஆனா, நாங்க விற்கத் தயாராக இல்லை. ஏன்னா, இவங்க எல்லாரும் எங்க குடும்பத்துப் பிள்ளைகள்” என்று நெகிழ்கிறார்.

அது உண்மைதான் என்பதை, தனது துதிக்கையால் பரமேஸ்வரனின் தலையைத் தொட்டு முகத்தை வருடிக் கொஞ்சத் தொடங்கியது அருகிலிருந்த யானை.

புதிய தலைமுறை வார இதழ்

Related Posts

error: Content is protected !!